Tuesday, June 4

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர்!- அமைச்சர் டக்ளஸ்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் என பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதில்லை எனவும்,  நாட்டின் பிரச்சினைகளுக்கோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ தீர்வுகளை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் தங்களது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு நடந்து கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களது அரசியல் இருப்பிற்காக பிரச்சினைகளை நீட்டிக்க வேண்டுமென்றே கூட்டமைப்பு விரும்புகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் சமாதானமாக வாழ்வதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்பவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது, தற்போது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும், அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென நாட்டின் சகல தமிழ் மக்களும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சின் நடமாடும் சேவை

Hafis

கிழக்கு மாகாண, விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் இரண்டாம், மூன்றாம் நாள் நடமாடும் சேவைகள் நடைபெற்றபோது மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.

கந்தளாயிலுள்ள கந்தளாவ இயற்கை சினைப்படுத்தும் நிலையம் உதவி விவசாய பணிப்பாளர் காரியாலயம், கால்நடை காரியாலயம், விவசாய போதனாசிரியர் காரியாலயம், நெசவு நிலையம், நெசவு பொருட்கள் விற்பனை நிலையம், வானல கமநல சேவைகள் நிலையம், சேருநுவர கால்நடை விவசாய திணைக்களம் ஆகியவற்றை தரிசித்து மக்கள் குறைபாடுகளை கேட்டறிந்தார்.

இக்கலந்துரையாடலின் போது விவசாயம் கால்நடை சம்மந்தமான பல்வேறு பிரச்சனைகள் பொது மக்களால் முன் வைக்கப்பட்டது. ஆப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக தனது உத்தியோகத்தர்களுக்கு, பணிப்பாளர்களுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

அமைச்சர் ஹக்கீம் பலஸ்தீன் பயணம்

Palas-Hakeem

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை (03.05.2013) அதிகாலையில் பலஸ்தீனத்திற்கு பயணமானார்.

எதிர்வரும் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் அங்கு நடைபெறவுள்ள பைத்துல் முகத்திஸ் 4 ஆவது சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்கான அழைப்பை அந்நாட்டு வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் மஹ்மூத் அல் ஹப்பாஷ் அண்மையில் இலங்கை வந்திருந்த பொழுது நேரடியாகவே அமைச்சர் ஹக்கீமுக்கு விடுத்திருந்தார்.

இஸ்ரவேலின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பலஸ்தீன புனித பூமியில் அங்கு வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் குறித்தும் இந்த சர்வதேச மாநாட்டின் போது உரிய கவனம் செலுத்தப்படவுள்ளது. அமைச்சர் ஹக்கீம் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

சிங்கள ராவய அமைப்பு மாடு அறுப்பதற்கு எதிராக கொழும்பில் சத்தியாகிரகத்திற்கு ஏற்பாடு

20130603-210957.jpg
மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கோட்டை போதி மரத்திற்கு அருகாமையில் சத்தியாக்கிரகம் மற்றும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சிங்கள ராவய அமைப்பு தயாராகின்றது.
கால்நடைகளை பலியிடுவதை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அக்மீமன தயாரத்தன தேரரர் தெரிவித்தார்.
பௌத்த பிக்கு ஒருவர் அண்மையில் கண்டி தலதா மாளிகையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டமையை அடுத்தே பசுக்கொலை தொடர்பாக சமூகத்தில் மீண்டும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 24ம் திகதி கொழும்பு துறைமுக தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டது

கொழும்பு துறைமுக களஞ்சியப் பகுதி ஒன்றில் கடந்த 24ம் திகதி அதிகாலை ஏற்பட்ட தீப்பரம்பலுக்கான காரணம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
துரித கதியில் ஆவியாகும் தன்மையைக் கொண்ட இரசாயனத்தின் தாக்கம் தான் தீப்பரம்பலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இன்றைய தினம் வெளியிட்டார் துறைமுக செயல்திட்ட அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்தன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
இது குறித்து துரித கதியில் ஆவியாகும் தன்மையைக் கொண்ட இரசாயனங்களை இறக்குமதி செய்த நிறுவனம் சுங்கத்திற்கு அறிவிக்கவில்லை எனவும், அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த இரசாயனப் பொருளை அதற்கேற்ற பாதுகாப்பான இடத்தில் களஞ்சியப்படுத்தி இருக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இந்த தீ விபத்தில் 55 கோடியே 60 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாதணிகள் மற்றும் பயணப் பொதிகளில் தங்க ஆபரணங்கள்; பெண்கள் மூவர் சுங்கப் பிரிவினரால் கைது


சட்டவிரோதமாக ஒருதொகை தங்க ஆபரணங்களை சென்னைக்கு கொண்டு செல்ல முயற்சித்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த நகைகளின் பெறுமதி 52 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் என சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
பூர்த்தி செய்யப்படாத தங்க ஆபரணங்கள் குறித்த பெண்களினால் மிகவும் சூட்சுமமான முறையில் அவர்களின் பாதணிகள் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.
இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என சுங்கப் பிரிவு சுட்டிக்காட்டியது.

13வது திருத்தத்தை பலவீனப்படுத்தினால் அரசிலிருந்து வெளியேவோம்..! முஸ்லிம் காங்கிரஸ் மிரட்டல்


















அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அரசாங்கத்தில் இருந்து தமது கட்சி வெளியேறும் என முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப் தீன் கருத்து வெளியிடுகையில்; சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் சபை இது குறித்து நேற்று முன்தினம் விவாதித்தது. இவாறான முடிவொன்று எட்டப் பட்டால் அரசுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு சந்திவட்டக்கற்கள் கொள்ளை

monk plasterஅநுராதபுரத்தில் கெபித்திக்கொல்லாவ பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் பெளத்த பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு அங்குள்ள சந்திர வட்டக்கற்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த விகாரைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பௌத்த பிக்கு மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின் வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டு பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரைணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய உளவு விமானம்!

கொழும்பு: இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹனவும் இணைந்து இந்த ஆளில்லா உளவு விமானத்தை தயாரித்துள்ளனர். 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அனுசரணையாளர்களின் உதவியுடன் விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ்- அமைச்சர்கள் குழு விசேட சந்திப்பு


slmc05ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது- கட்சியின் அதி உயர் பீட கூட்டத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம்: வடமாகாணத்தில் சமுர்தி உத்தியோகஸ்தர்கள் நியமனத்திலும், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அந்த மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான வளப்பங்கீடு போன்ற விவகாரங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் அதிஉயர் பீட கூட்டத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இவை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்த அதிருப்தியை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரிடம் தெரிவித்து, அவற்றுக்கான தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவசரமாக பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.