Monday, July 1

1375 பௌத்தர்களுக்கு ஒரு விஹாரை: 983 முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளிவாசல்


ganasara deroநாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் குறித்த ஒழுங்கான தகவல்கள் எதுவும் புத்தசாசன அமைச்சிடம் இல்லை. ஆனால், எம்மால் பெறப்பட்டுள்ள தகவல்களின்படி நாட்டில் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இங்குள்ள முஸ்லிம் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 983 முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளி என்ற விகிதத்திலே உள்ளன. ஆனால் பௌத்த விஹாரைகளோ அந்த அளவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மேற்படி அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;
நாட்டில் 10343 பௌத்த விஹாரைகள் உள்ளன. இவை 1375 பௌத்தர்களுக்கு ஒரு விஹாரை என்ற அடிப்படையில் உள்ளன. 5035 இந்து கோயில்கள் உள்ளன. இது 507 இந்துக்களுக்கு ஒரு கோயில் என்ற அடிப்படையில் உள்ளன. அதேபோன்று 1350 கிறிஸ்தவ ஆலயங்கள் பதியப்பட்டுள்ளன. பதியப்படாது ஆயிரக்கணக்கில் உள்ளன. மேற்கண்ட அடிப்படையில் 1100 கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆலயம் என்றே உள்ளன.
இந்தத் தரவுகளுடன் ஒப்பிடுகையில் பௌத்த நாடாக இருந்தும் பௌத்தர்களுக்கே அநீதி இழைக்கப்பட்டுள்ளமை நன்கு தெளிவாகின்றது. எனவே, தொடர்ந்தும் எம்மால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எமது பொறுமையை சோதிக்க வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதனைப் பிரதிபலிக்கக் கூடிய, பௌத்தர்களின் உரிமைகளுக்காக உழைக்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒருவரை புத்தசாசன அமைச்சராக நியமிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பௌத்த மக்களின் உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் விதத்தில் சீர்குலைத்து வரும் வேற்று மத அமைப்புக்கள் குறித்தும் அரசாங்கம் அவசரமாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். இவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லாவிடின் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இதனைச் செய்ய அரசாங்கம் முன்வராத பட்சத்தில் எமது பொதுபலசேனா உத்தியோகபற்றற்ற பொலிசாக செயற்பட வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
எமது நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்தினருக்கே அனைத்து தடைகள், இடையூறுகளும் உள்ளன. பௌத்தர்களின் உரிமைகள் அதில் மறுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை மதங்களின் உரிமைகளுக்கு பிரச்சினை இல்லை. இங்கு 400க்கும் மேற்பட்ட பிறமத அமைப்புக்கள் இயங்குகின்றன. பௌத்தர்களின் புனித நாட்களில் கூட நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு இந்த அமைப்புக்கள் செயற்படுகின்றன. எமது நாட்டு கலாசாரம் சீர்குலைக்கப்பட்டுள்ளது.
எமது ஜனாதிபதி பௌத்த மக்களின் பெரும்பான்மை வாக்குகளாலே தெரிவு செய்யப்பட்டவர். எனவே, இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிதான் பௌத்தர்களின் விடயத்தில் உதவ முன்வர வேண்டும் என்றார். இவ்வைபவத்தில் பொதுபல சேனாவின் பிரதிநிதி எடிகல்லே விமலசார தேரர் உட்பட மற்றும் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment