Wednesday, June 26

காலி கராப்பிட்டிய முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு


Court-Appealகாலி காரப்பிட்டிய வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள காணிகளை கைப்பற்றுவதை தடுத்து நிறுத்த, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.


பொது நடவடிக்கை ஒன்றுக்காக இந்த காணிகளை கைப்பற்றப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக மனுவொன்று அங்கு வசிக்கும் மக்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனு மீதான விசாரணைகள் நீதியரசர்கள் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் மாலனி குணரட்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதியரசர்கள் இந்த தடையுத்தரவை பிறப்பித்தனர்.

காலி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகிய தரப்பினர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

பொது நடவடிக்கை எனக் கூறி, அரசாங்கம் தமது காணிகளை கைப்பற்ற முயற்சித்து வருவதாக மனுதார்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த காணி எப்படியான பொது நடவடிக்கைக்காக கைப்பற்றப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

காலி, கராப்பிட்டி முஸ்லிம்கள் வெளியேற்றம்

காலி கராப்பிட்டி வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள 32 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்மக்களை வெளியேற்றுவதற்காக கடந்த புதன்கிழமை (19.06.2013) அந்த பகுதிக்கு பொலிஸாரின் உதவியுடன் சென்ற நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் அதிகாரிகளும் தொழிலாளர்களும், பலவந்தமாக குறித்த குடும்பங்கள் வசிக்கும் நிலப்பகுதியை அடையாளமிட்டு, வேலி போட்டுள்ளனர். 

இது குறித்து அங்குள்ள மக்கள் காலி நகர சபையின் அதிகாரிகளிடம் வினவிய போது, நகர அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உயர் மட்டத்தில் இருந்து கிடைத்த உத்தரவிற்கு அமைய வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment