Monday, May 13

உத்தேச தேசிய ஷூறா சபை தொடர்பான முன்னோடி கலந்துரையாடல் நிகழ்வு

shoraகடந்த 02.05.2013 வியாழன் மாலை கொழும்பு மியாமி வரவேற்பு மண்டபத்தில் உத்தேச தேசிய ஷூறா சபை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கை முஸ்லிம் அவ்வப்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆயினும், சமகாலத்தில் முன்னெப்போதுமில்லாத அளவு பாரிய சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
இந்த சவால்களை விவேகமாகவும் நிதானமாகவும் அனுகுவதற்கான ஒருங்கிணைந்த தலைமைத்துவ கட்டமைப்பு ஒன்று சமூகத்திற்குத் தேவை என பலமாக உணரப்பட்டுள்ளது. இதுவே பரவலான பேசுபொருளாக உள்ளது.முஸ்லிம் சமூக நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள், கல்வியலாளர்கள் ஒன்றுபட்டு சிந்தித்து, கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்தும்போதே அதிகரித்த பயன்களைப் பெற முடியும் என பரவலாக உணரப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள், இஸ்லாமிய இயக்கங்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த அமர்வில் ஒன்று கூடினர்.

உத்தேச தேசிய ஷூறா சபையை முன்னெடுப்பதற்கான இடைக்காலக் குழு, நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், இந்த உத்தேச ஷூறாவின் கட்டமைப்பு, வடிவம் போன்ற விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவொன்றைத் தயாரித்து, சமூக ஆர்வலர்களின் விரிவான கலந்துரையாடலுக்கு அதனைச் சமர்ப்பித்தது. இது ஷூறாவுக்கான ஷூறாவாக அமைந்திருந்தது.
இந்த ஆலோசனைகளை கவனத்திற் கொண்டு இன்னும் ஒரு மாத கால அளவில், பலரது கருத்துக்களையும் உள்வாங்கி, இறுதி வடிவம் ஒன்றைத் தயாரிக்கும் எதிர்பார்ப்பையும் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர்.

இங்கு முன்னணி முஸ்லிம் பிரமுகர்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைக்கும் விஷேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதில் உத்தேச தேசிய ஷூறா எவ்வாறு அமைய வேண்டும், அது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள், அதன் செயற்பாட்டு முறை எவ்வாறு அமையலாம், எதிர்காலத்தில் என்னென்ன விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பன போன்ற முக்கிய ஆலோசனைகள் பல முன்வைக்கப்பட்டன.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மூத்த ஆலிம்களும், சமூக ஆர்வலர்களும், துறைசார் நிபுணர்களும், தப்லீக், தரீக்கா, ஜமாஅத்தே இஸ்லாமி, தௌஹீத் போன்ற பல்வேறு இஸ்லாமிய சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிக்கும் அறிஞர்களும், முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கருத்துக்களைப் பரிமாறினர். அவர்கள் முயற்சியை மனதார வரவேற்று இங்கு பேசியமை மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சமாகும்.

இவ்வாறான முயற்சி இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று எனவும், இந்த உத்தேச ஷூறா சபை காலதாமதம் ஆகாமல் விரைவாக அமைக்கப்படுவதே சிறந்தது எனவும் இங்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

ஷூறா சபை முழுமையான வடிவம் பெற கால அவகாசம் தேவை. ஆதலால், இடைக்கால ஷூறா சபையொன்றை கூடிய விரைவில் அமைப்பதே பொருத்தமானது எனவும் இங்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

உத்தேச ஷூறா சபையின் கட்டமைப்பு தேசிய ஷூறா சபையாக மட்டும் அமையாது. ஊர்மட்ட ஷூறா சபை, பிரதேச ஷூறா சபை, மாவட்ட ஷூறா சபை என்ற வடிவங்களும் அமையவேண்டும் என, உத்தேச ஷூறா சபைக்கான இடைக்காலக் குழு தனது முன்மொழிவில் ஆலோசனை முன்வைத்திருந்தது. இதனை மேலெழுந்தவாரியாக அமைப்பது பொருத்தமானதல்ல என்ற கருத்தும் இங்கு முன்வைக்கப்பட்டது.

இந்தக் கருத்தை பலரும் வரவேற்றுப் பேசினர். கொழும்பை மட்டும் மையப்படுத்திய ஷூறா சபை பலவீனமான ஒன்றாகவே அமையும். பிராந்திய மட்ட ஷூறா கட்டமைப்பு தொடர்புகளினூடாகவே இது வலுவடையும் என அவர்கள் மேலும் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாறக் (மதனி), ஷரீஆ கவுன்ஸில் ஆயுள்காலத் தலைவர் மௌலவி ஹஸ்புல்லாஹ் (பஹ்ஜி), அஷ்ஷெய்க் முப்தி யூஸுப் ஹனிபா, பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவத்துறைப் பேராசிரியர் எம். சித்தீக், ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீரும் தன்வீர் அகடமியின் பணிப்பாளருமான மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், அல்குர்ஆன் திறந்த கல்லூரியின் தலைவர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், உளவளத்துறை விரிவுரையாளர் ஏ.எல்.எச்.எம். இப்றாஹீம் ஆகியோரும் இங்கு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
ஈரான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர், ஸஹ்வா இஸ்லாமிய அறபுக் கல்லூரி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி, கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி பிரதி அதிபர் மௌலவி ஏ.எல்.எம். ஹாஷிம், சவூதி அறேபியாவுக்கான முன்னாள் தூதுவர் சட்டத்தரணி ஜாவிட் யூஸுப், சகவாழ்வு ஆர்வலர் மன்ஸூர் தஹ்லான் ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர்.

இக்கருத்துப் பகிர்வு அரங்கை ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) நடத்தி வைத்தார்.    

கடந்த காலங்களில் இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டமை தொடர்பாகவும் இங்கு ஞாபகப்படுத்தப்பட்டது. இதுபோன்ற முயற்சிகள் வெற்றிகரமாக எப்போதோ முன்னெடுக்கப்பட்டிருந்தால், இந்நாட்டு முஸ்லிம்கள் பெருமளவு நன்மைகளை அடைந்திருப்பர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எல்லோரும் ஒற்றுமை பற்றி தொடர்ந்தும் பேசிவந்துள்ளனர். ஒற்றுமையைப் பற்றி தனித்தனியாக பேசுவதைவிட, இவ்வாறு ஒன்றிணைந்து பேசுவது பலவகையிலும் நன்மை பயப்பதாய் அமையும். எவ்வாறான அணுகுமுறை மூலம், ஒருமித்து சிந்தித்து செயலாற்ற முடியும் என்பதிலும் உடன்பட்ட பார்வை அவசியமாகும்.

இந்த வகையில் எல்லோரும் உடன்படக் கூடிய குறைந்தபட்ச வேலைத்திட்டம் குறித்து முஸ்லிம் சமூகம் வேகமாகவும், விவேகமாகவும் சிந்திக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

முஸ்லிம் சமூக விவகாரங்கள் தொடர்பாக குறுங்கால, இடைக்கால, நீண்டகாலத் திட்டங்கள் அவசியம். அவற்றை ஒருமித்து வகுப்பதற்கு இவ்வாறான பொறிமுறைகள் மிகவும் இன்றியமையாதவை. சமூகப் பாதுகாப்பிற்கான சிறந்த கட்டமைப்பாகவும் இது அமையும் என்றும் இங்கு பேசப்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கை நாட்டின் அபிவிருத்தியிற்கும் சுபீட்சத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் இந்த உத்தேச ஷூறா சபை ஆக்கபூர்வமாகப் பங்களிக்க வேண்டும் என்ற தேவையை பலரும் அழுத்தியுரைத்தனர்.

தேசிய பிரச்சினைகளில் பங்குபற்றாமல் ஒதுங்கி இருப்பதோ, நாட்டைக் கட்டியெழுப்பும் உன்னத பணியில் பங்கேற்காமல் இருப்பதோ எந்த வகையிலும் பொருத்தமற்றது என்ற கருத்தை பலரும் உறுதிபட தெரிவித்தனர். அதற்குப் பங்களிப்பது இந்த ஷூறா சபையின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

உத்தேச தேசிய ஷூறா சபை, தற்போதிருக்கும் எந்த சமூக நிறுவனங்களுக்கு மேலாகவோ கீழாகவோ அமையாது. அவற்றின் செயற்பாடுகளுக்கும் அது சவாலாகவும் அமைய மாட்டாது. மறுதலையாக, இந்நிறுவனங்களையும் தனிநபர்களையும் பலமாக ஒன்றிணைக்கின்ற, அனுபவங்களைப் பரிமாறுகின்ற, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியாக அமைகின்ற, எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்க, சுயாதீனமான, உறுதியாக தீர்மானம் எடுக்கும் ஆற்றல் உள்ள ஒன்றாகவே அத அமைய வேண்டும் என உத்தேச ஷூறாவுக்கான இடைக்காலக் குழு தனது ஆலோசனையை முன்வைத்திருந்தது. இக்கருத்தை கலந்து கொண்டோர் ஆதரித்துப் பேசினர்.

இங்கு கலந்து கொண்ட அனைவரினதும் ஆலோசனைகள் எழுத்து மூலம் பெறப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ், மீண்டும் இவற்றை ஆராய்ந்து, கலந்துரையாடி, பொது உடன்பாட்டை எட்டும் செயலமர்வு ஒன்று, ஒரு மாத கால அவகாசத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்வில் ஷூறா என்ற இஸ்லாமிய எண்ணக்கரு தொடர்பான விளக்கமும் முன்வைக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இதைக் குறிப்பிடலாம்.

ஊடக அறிக்கை
உத்தேச ஷூறா சபையை முன்னெடுப்பதற்கான இடைக்கால குழு.

1
2
3No comments:

Post a Comment