Wednesday, May 15

பொதுபல சேனாவை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்


அமைதியான நாட்டுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கி, நாட்டு மக்களின் ஐக்கியத்தை துண்டாட நினைக்கும் பொது பல சேனா என்ற பிரிவினைவாத இயக்கத்தை அரசு தடை செய்வதுடன் அந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் தொடர்பில் விரிவான விசாரனையும் நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றது.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் அமைதியும், சுபீட்சமும் நிலை பெற்றுள்ள இவ்வேலையில் கடந்த சில மாதங்களாக இனவாதத்தை மக்கள் மத்தியில் பரப்பி சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ள பொது பல சேனாவை அரசாங்கம் விசாரனைக்கு உட்படுத்த வேண்டும். என ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியாழ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இயங்கும் அல்-ஜிஹாத், அல்-கைதா, தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது பல சேனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
யுத்தத்தை வெற்றி கொண்டு நாட்டை அமைதியாக வழி நடத்தி வரும் அரசை கொச்சைப் படுத்தும் விதமாக அல்-ஜிஹாத், மற்றும் அல்-கைதா போன்ற ஆயுதம் தாங்கும் போராட்டக் குழுக்கள் இலங்கையில் இருப்பதாக பொது பல சேனா கருத்து வெளியிட்டுள்ளது. இது அரசின் நம்பகத் தன்மையை கெடுக்கும் செயல்பாடாகும்.
உண்மையில் அல்-ஜிஹாத் மற்றும் அல்-கைதா போன்ற இயக்கங்கள் இலங்கையில் இயங்குமாக இருந்தால் அவற்றுக்கு எதிராக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் தாங்கள் இலங்கை நாட்டின் உத்தியோகப் பூர்வமற்ற பொலிசார் என்று கூறிக் கொண்டு சட்டத்தை மதிக்காமல் சட்டத்தை தனது கையில் எடுத்து செயல்படும் பொது பல சேனா எனும் அமைப்பே இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஒரு வருடகாலமாக பகிரங்கமான செயல்பட்டு வருவதனால் அவ்வமைப்பையும் அதன் அங்கத்தவர்களையும் அரசாங்கம் தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று அராங்கத்திற்கு கோரிக்கை வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்களை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொது பல சேனா கோரிக்கை வைக்கின்றது. உண்மையில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் யார்? தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்களா? அல்லது பொது பல சேனாவா? என்பது அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவாகத் தெரிந்த விஷயமாகும்.
இலங்கையில் செயல்படும் தவ்ஹீத் அமைப்புக்களில் எவரும் நாட்டின் இறையான்மைக்கு எதிராக எச்சந்தர்ப்பத்திலும் செயல்படவில்லை. இதே நேரம் அரசின் சுமையை குறைக்கும் விதமாக பலவிதமான சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
கடந்த ஒரு மாதங்களாக பொது பல சேனாவின் செயலாளர் கலபடவத்தே ஞானசார தேரர் அமெரிக்காவில் இருந்தார். இவரும் இவருடைய குழுவினரும் அமெரிக்காவுக்கு சென்றது ஏன்? என்பது பற்றி அரசு விரிவான விசாரனை ஒன்றை நடத்த வேண்டும். அதே நேரம் இவர்களுக்கு பின்புலமாகவிருந்த பிரச்சினைகளுக்கு தூண்டுதலாக இருப்பவர்கள் விஷயத்திலும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்..

No comments:

Post a Comment