Wednesday, May 15

ஜெய்லானி மெஹீதீன் பள்ளிவாசல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை


தப்தர் ஜெய்லானி மெஹீதீன் பள்ளிவாசல் பலாங்கொடை கூரகலையில் அமைந்துள்ளது. நீண்ட கால வரலாற்றை உடைய இந்த இடம் புராதன காலத்தில் இருந்து முஸ்லிம்கள் விஜயம் செய்யும் ஓர் இடமாகும். முஸ்லிம்கள் ஆரம்பத்தில் பாவா ஆதம் மலைக்கு விஜயம் செய்யும் போது இந்த இடத்தை ஓர் தங்குமிடமாகப் பயன்படுத்தினர். இஸ்லாத்தின் முக்கிய ஞானிகளில் ஒருவரான மெஹீதீன் அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் தியானம் இருந்த சுரங்க மலை இங்கு அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் இருந்து போர்த்துக்கீசர்களதும் ஒல்லாந்தர்களதும் பிரித்தானியர்களதும் கட்டுப்பாட்டில் இலங்கை இருந்த போதே, இந்தப் பாதை பயன்படுத்தப்படாது அடர்ந்த வனமாக மாறியது. 
1875 ஆம் ஆண்டு லக்டீவ் தீவிலிருந்து இலங்கை வந்த மௌலானா அவர்களால் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது (அவுலியாக்கள் தங்கியிருந்த இடத்தைத் தெரிந்தவர்) முஸ்லிம்கள் கூரகலைக்கு விஜயம் செய்து, தமது தொழுகை மற்றும் சமய வழிபாடுகளில் 1890 முதல் இற்றை வரை 124 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்தும் பல வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் இந்த இடத்திற்கு விஜயம் செய்து வருகின்றனர். 
1972 ஆம் ஆண்டு அமைச்சரவையின் தீர்மானப்படி இந்த பிரதேசம் புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் திணைக்களம் இப்பிரதேசம் பௌத்த மடாலயம் என குறிப்பிட்டு, பெயர்ப்பலகை ஒன்றைப் பொருத்தியிருந்தது. திணைக்களத்தினால் கூரகலையில் மேற்கொள்ளப்படும் அகழ்வு வேலைகள் முஸ்லிம்களது வழிபாட்டு நடவடிக்கைகளில் பாதிப்பாக அமையாது என்ற அறிவித்தலும் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அதன்பின் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களால் புதைபொருள் ஆராய்ச்சிப் பிரதேசத்திற்கு வெளியே புனித பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் யாத்திரீகர்களின் வசதிக்காக கட்டிடங்கள் மற்றும் பொது வசதிகள் ஏற்படுத்துவதற்காக 26 ஏக்கர் காணி குத்தகைக்குப் பெறப்பெற்றது. 
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் கூரகலைக்கு விஜயம் செய்த போது, இதுவொரு புதைபொருள் ஆராய்ச்சி பிரதேசமாக இருப்பதால் அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, புறம்பான கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வாறு அகற்றப்படும் பல கட்டிடங்கள் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திற்கு கையளிக்க முன் அங்கு இருந்தவை ஆகும். இக் கட்டிடங்களை அகற்றுவதற்காக மகா சங்கத்தினர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இக்குழுவின் இணக்கத்துடனே கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும் என புதைபொருள் ஆராட்சித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு வழங்கினார். 
1922 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என்றும் 100 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் மேற்கொண்டு வரும், தமது சமய வைபவங்கள் எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முடியும் என்றும் முஸ்லிம்களுக்கு தொடராக இந்தப் பகுதிக்குச் சென்று தமது வழமையான வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்று பாதுகாப்புச் செயலாளரும் புதை பொருள் ஆராய்ச்சி திணைக்களப் பணிப்பாளரும் முஸ்லிம்களுக்கு தெரிவித்தனர். 
புதைபொருள் ஆராய்ச்சிப் பிரதேசத்திற்கு வெளியே உள்ள 26 ஏக்கர் காணியை அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகளை சுற்றாடல் கட்டடக் கலைஞர் ஒருவரின் ஆலோசனைப்படி நில அளவையாளர்கள் மூலம் பள்ளிவாசல் நிர்வாகம் உடனடியாக மேற்கொண்டது. நாங்கள் வேலைகளை ஆரம்பித்திக்கிறோம் என்பதை பாதுகாப்புச் செயலாளருக்கும் புதைபொருள் ஆராய்ச்சி திணைக்கள பணிப்பாளருக்கும் உடனடியாக எழுதியதோடு, கட்டிடக் கலைஞர் தமது வரைபடங்களையும் செலவு விபரங்களையும் தந்தபின் கட்டிடங்களை அகற்றும் வேலையை செய்வதற்கும் இருந்தோம். 
அதன் பின் கட்டிடங்களுக்கான நிதியை தேடவிருந்தோம். பாதுகாப்புச் செயலாளரும் எமக்கு கட்டிடங்களை நிர்மாணிக்க பண உதவி தருவதாக அறிவித்திருந்தார். எமது நிர்மாணப் பணிகளை ஜூலை ஆகஸ்டில் ஆரம்பிக்க இருந்தோம். துரதிஷ்டவசமாக புதைபொருள் ஆராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அவர்கள் பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைகளைப் பின்பற்றாது. அவரது சட்ட உத்தியோகத்தரின் ஆலோசனையின்படி சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பின் பேரில் சுமார் 50 உள்ளுர் இளைஞர்களை சேர்த்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு முன்னறிவித்தல் எதுவும் வழங்காது கட்டிடங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட அகழ்வுகளின் உள்ள பொருட்களை திறந்த பகுதிக்கு வெளியே குவித்து விட்டார்கள். அதன் மூலம் மே மாத விடுமுறையின் போது, பள்ளிவாசலுக்கு விஜயம் செய்ய இருந்த யாத்திரீகர்களுக்கு தங்குமிடமோ மலசல கூடமோ இல்லாமல் போய்விட்டது. 
பெண்களுக்கான கிணற்றைச் சுற்றி அமைத்திருந்த சுவர்களும் உடைக்கப்பட்டிருந்தன. பள்ளிவாசல் முகாமையாளர் மற்றும் மௌலவிகளின் அறையும் இன்று உடைக்கப்படவிருப்பதாக அறிகின்றேன். உடைக்கப்பட்ட சில கட்டிடங்கள் கொடையாளிகளால் வழங்கப்பட்டவையாகும். அந்த கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும் என அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கு அறிவிக்க வேண்டியிருந்த போதிலும் அதனைக்கூட செய்ய முடியவில்லை. இந்த செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை மதிக்காத தன்மையையும் பாதுகாப்புச் செயலாளரினால் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை மதிக்காமையுமே என்பதைக் குறிப்பிடுவதில் கவலை அடைகின்றேன். 
நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கிருக்கும் முஸ்லிம்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறாது இப்பிரதேசத்தைச் சுத்தப்படுத்துவதற்கு புதைபொருள் திணைக்களத்திற்கு உரிமை இருக்கின்றதென்பதை நான் புரிந்து கொள்கின்றேன். ஆனால், இதனை முறையாக மேற்கொள்வதற்கு மேலும் சில மாதங்கள் காத்திருக்குமாறு கேட்பது அதிகபட்ச கோரிக்கையா? யாத்திரீகர்கள் தங்கியிருப்பதற்கு பயன்படுத்திய கட்டிடங்களை அகற்றியது குறித்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட சகலருடனும் பேசி அவர்களது ஒத்துழைப்புடன் இதனைச் செய்திருக்கலாம். இங்குள்ள கட்டிடங்களை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவதனையும் அகழ்வு வேலைகளையும் நிறுத்துமாறு பணிப்பாளர் நாயகத்துடன் பணிவாக வேண்டுகிறேன். எங்களுக்கு யாத்திரீகர்களுக்கும் அங்கு நிரந்தரமாகத் தங்கியிருப்போருக்கும் கட்டிடங்கள் மற்றும் பொது வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு இடமளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஒருவருடைய எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் எங்களுக்கு அறிவித்துள்ளார். இவற்றை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நான் கருதுகின்றேன். இந்தப் பிரதேசம் முக்கியமான புதைபொருள் பிரதேசமாக இருக்கும் என்று அவர் நம்புகின்றார். 8.05.2013 வெளியான ஷஅத| நாளிதழில், பொதுபலசேனா இப்பிரதேசத்திற்கு பெருந்தொகையானவர்களை அழைத்து கட்டிடங்களை அகற்றுவதாக தெரிவித்துள்ள செய்தி ஒன்று வெளியாகி இருப்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறான அநாவசியமான செயற்பாடுகள் காரணமாக சமயங்களுக்கிடையிலே அமைதியின்மை ஏற்பட இடமுண்டு. அத்தோடு, இப்பிரதேசத்தில் உள்ள பெறுமதி மிகு புதைபொருள் பொருட்கள் அழிக்கப்படலாம்.  
1971 ஆம் ஆண்டு முதல், நாடு எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பலாங்கொடையில் வாழும் மக்களாகிய நாங்கள் இன, மத, சாதி, அரசியல் வேறுபாடுகளின்றி ஒன்றாக செயற்பட்டுள்ளோம். சமயங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. பிரச்சினைகள் ஏற்படும் போது வன்முறைகளினால் அன்றி அதனைப் பேச்சுவார்த்தைகள் மூலம் நாங்கள் தீர்த்துக் கொண்டுள்ளோம். ரொஷானா அபுசாலி, நம்பிக்கையாளர் தப்தர் ஜெய்லானி முகைதின் பள்ளிவாசல் காலஞ்சென்ற எம்.எல்.எம். அபுசாலி அவர்களை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் உங்களை உயர்வாக மதித்துள்ளார். 17 வருட காலம் அவர் உங்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அதற்கு முன்பு பல வகையில் உங்களுக்கு சேவை செய்துள்ளார். வெளியார் வந்து பலாங்கொடையில் நிலவும் சமாதான நிலையை அழித்துவிட இடமளிக்க வேண்டாம் என பலாங்கொடை வாழ் மகாசங்கத்தினரையும் பொது மக்களையும் அல்ஹாஜ் அபுசாலியின் பேரால் நான் மன்றாடிக் கேட்கின்றேன்.
ரொசானி அபுசாலி
பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை

No comments:

Post a Comment