Monday, May 13

மெகொட கொலன்னாவ பள்ளிவாசல் கல்வீச்சு தாக்குதல்: தேரர்களும் கலந்து சுமுகமாக தீர்வு

மெகொட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்துள்ளதுடன் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
இன்று மாலை மெகொட கொலன்னாவ பிரதேசத்தில் குடிபோதையுடன் வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கும் முஸ்லிம் ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்  ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்தே குறித்த பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விடிவெள்ளிக்கு தெரிவித்தனர்.

இதனை அடுத்து உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை தொடர்ந்தனர். அத்துடன் குடிபோதையில் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரையும் பொலிசார் கைது செய்தனர்.
குறித்த தாக்குதலில் பள்ளிவாசலின் பிரதான நுழைவாயில் கண்ணாடிக்கு  சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளிவாசல்  தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து  ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்ரகுமானும் அங்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டார்.
எவ்வாறாயினும் இன்று இரவு 8.30 மணியளவில் குறித்த பள்ளிவாசலில் குறித்த பிரதேச பெளத்த தேரர், பொலிஸ் பொறுப்பதிகாரி முஸ்லிம், சிங்கள மக்களின் பங்குபற்றுதலுடன் விஷேட சமாதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பள்ளிவாசல் மீது கல்வீசியதாக சந்தேகிக்கப்படும் நபரும், அவருடன் முரண்பட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படும் முஸ்லிம் இளைஞரும் அழைத்துவரப்பட்டிருந்ததுடன் சமாதான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை  குறித்த பிரதேசத்தில் கலவரம் ஒன்று ஏற்படுவதை தவிர்க்க பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த காலங்களில் குறித்த பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவுவது தொடர்பில் சிறு பிரச்சினை ஒன்று இருந்துவந்துள்ளது. முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவுவதற்கு சிலர் முயற்சித்த நிலையில் அதற்கு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே  இன்றையதினம் மாலை குடிபோதையுடன் வந்த சிலருக்கும் முஸ்லிம் ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் அது பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுமளவுக்கு நிலைமையை மோசமடையச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment