Monday, April 29

கல்முனை மாநகர சபை அமர்வை ஆளும் மு.கா. உறுப்பினர்கள் அறுவர் பகிஷ்கரிப்பு

 
கல்முனை மாநகர சபையின் இன்றைய அமர்வை பிரதி முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உட்பட ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறு பேர் பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.
 
முதல்வர் சிராஸ் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகின்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வை பிரதி முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான உமர் அலி, ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், ஏ.எம்.றகீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஏ.பஷீர் ஆகியோரே பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.
 
நேற்று இரவு இடம்பெற்ற ஆளும் தரப்பு குழுக் கூட்டத்தின் போது  உறுப்பினர் உமர் அலியை முதல்வர் சிராஸ் தரக்குறைவான வார்த்தைகளால் ஏசி அச்சுறுத்தியதைக் கண்டித்தே தாம் இப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் தெரிவித்தார்.
 
கல்முனை மாநகர சபையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முதல்வரிடம் விளக்கம் கேட்டபோதே என் மீது சீறிப் பாய்ந்து தகாத வார்த்தைகளால் முதல்வர் தன்னை அச்சுறுத்தினார் என்று ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உமர் அலி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றையும்  வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment