Friday, April 5

பொதுபல சேனாவுக்கு எதிராக கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானம்;.

பொதுபல சேனா இயக்கம் பௌத்த மதத்திற்கு மட்டுமல்ல இலங்கையில் வாழும் ஏனைய இனத்திற்கும் எதிரான இயக்கமாக உருவெடுத்து வருகின்ற நிலையில் அவற்றை தடை செய்யக்கோரி கிண்ணியா நகர சபை கூட்டத் தொடரின்போது தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது பொதுபல சேனா வன்முறை இயக்கம் ஹலால் என்ற காய் நகர்த்தலில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டில் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் ஹலால் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து பர்தா என்ற விடயத்தில் மூக்கை நுழைக்கும் நிலையில் தற்போது காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது. இவ்வாறே முஸ்லிம்களின் ஈமானோடு விளையாடும் எண்ணம் உள்ள வன்முறை இயக்கமான பொதுபல சேனா என்ற இயக்கம் இனிவரும் காலங்களில் முஸ்லிம்களின் மதம் சம்பந்தமான எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைக்கும் செயலில் இறங்கும் நிலையை தடுத்து நிறுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
இது சிறுபான்மை மதங்களாக உள்ள ஏனையவர்களுக்கும் தலையிடிகை கொடுக்கும் ஒன்றாகவே உள்ளது. இவ்வியக்கத்தின் மூலம் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் நிலை தொடருமே தவிர குறையும் நிலை தோன்ற வாய்ப்பில்லாமல் போகும். 30 வருடகால யுத்தத்தின் சவால்களுக்கு மத்தியில் சமாதானம் பெறப்பட்டுள்ளது. அதன் பலன் இன்று இல்லாமல் போகும் நிலை இந்த பொதுபல சேனாவினால் உருவாகியுள்ளதை உணர்த்தி நிற்கின்றது.
கிண்ணியா நகர சபையின் சபை கூட்டத் தொடர் நகர பிதா டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் கூடியது. சபை நிகழ்வின் தற்போதைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் சம்பந்தமான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சபை உறுப்பினர்களின் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டது. இதன் போது 'இலங்கையில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக இன நல்லுறவுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் அண்மைக் காலமாக வரலாற்றில் என்றும் இல்லாதவாறு முஸ்லிம்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றார்கள். ஹலால் பிரச்சினை அதைத்தொடர்ந்து முஸ்லிம் பெண்களின் பர்தா உடை தொடர்பான பிரச்சினை என பிரச்சினைகள் நீண்டு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. இதனை கட்டுப்படுத்தாது இருப்பது வேதனைக்குரியதே. எனவே இத்தகைய செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும், கண்டித்தும் சபையில் பொதுபல சேனா எனும் வன்முறை இயக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என சபையில் எம்.ஏ.எம்.நிஜாமினால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 
குறித்த தீர்மானம் கிண்ணியா நகர சபையால் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment