Saturday, April 6

நேற்றைய அனைத்து கட்சி கூட்டமும் ஜனாதிபதியின் பதிலும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை, 5 ஆம் திகதி அலரி மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ் மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோர் தாம் தலைமைதாங்கும் முஸ்லிம் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள்  பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கு தருகிறோம்.
கூட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மஹிந்த, கட்சித் தலைவர்களை நோக்கி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார். அப்போது எல்லோரும் அமைதியாக இருந்துள்ளனர். இதன்போது முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முதலில் முஸ்லிம்கள் விவகாரம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். இதையடுத்து ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் தமது கருத்துக்களை துணிவுடன் கூறியுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனவாத நடவடிக்கைகள் குறித்தே முஸ்லிம் அமைச்சர்கள் அதிகமாக பேசியுள்ளனர்.
குறிப்பாக பொதுபல சேனாவை ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபய ராஜபக்ஸ வழிநடத்துவதாகவும், இதற்கு ஜனாதிபதி மஹிந்த ஆசிர்வாதம் வழங்கியுள்ளதாகவும் முஸ்லிம்கள் சந்தேகிப்பதாகவும், முஸ்லிம்கள் இவ்வாறே பேசிக்கொள்வதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த அரசாங்கம் படிப்படியாக முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்தால் தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களின் முழுமையான ஆதரவை இழந்து தவிக்கும் பரிதாம் ஏற்படுமெனும் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கை காரணமாக ஆத்திரம் மேலிட்டுள்ள முஸ்லிம்கள் பொறுமை காத்து வருவதாகவும், தமது பக்கம் நியாயங்கள் இருந்தும் பௌத்த தேரர்களுடனோ அல்லது அவை சார்ந்த அமைப்புக்களுடனோ விவாதங்களில் ஈடுபடும்போது சிறிய கீறல் ஏற்பட்டால்கூட அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடுமென்ற கவலை காரணமாகவே முஸ்லிம் தரப்பு தமது பக்க நியாயங்களைக்கூட எடுத்துரைக்கமுடியாத நிலையில் காணப்படுவதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இஸ்லாம் குறித்தும், தாம் வழிபடும் இறைவன் பற்றியும், தமது இறைத்தூதர்கள் குறித்தும் பௌத்தசிங்கள இனவாதிகள் மிகக்கேவலமான பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகவும், அசிங்கமான படங்களை இணைங்களிலும், பேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்வதாகவும், இவற்றினால் அமைச்சரவை அந்தஸ்த்திலுள்ள தமக்கே ஆத்திரம் பொங்கிவருவதாகவும், தமக்கே இந்நிலையென்றால் முஸ்லிம் சமூகம் எத்தகைய ஆத்திரத்துடன் காணப்படுகிறது என்பதை அரசாங்கமும், ஜனாதிபதியும் புரிந்துகொள்ள வேண்டுமென்றும்  முஸ்லிம் அமைச்சர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் சில பள்ளிவாசல்கள் தலைவர்கள் மீது இராணுவத்தினர் அழுத்தங்களை பிரயோகித்தமை, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், தயட்ட கிருள கண்காட்சிக்கு ஆட்கள திரட்டுவதற்காக கையாளப்பட்ட உபாயங்கள் என்பனவும் முஸ்லிம்கள் மத்தியில் விசனங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் வடக்கில் மீளக்குடியேறும் முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என பொதுபுல சேனா வெளியிட்டுள்ள கூற்றுக்கள் தொடர்பிலும் முஸ்லிம் அமைச்சர்கள் தமது கவலையை ஜனாதிபதியிடன் பகிர்ந்துகொண்டுள்ளனா.
வழமையைவிட முஸ்லிம் அமைச்சர்கள் இம்முறை துணிவாகவும், ஆத்திரம் மேலிட்டும் கருத்துக்கள் வெளியிடுவதை அவதானித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முஸ்லிம் அமைச்சர்களை நோக்கி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு இனவாத அமைப்பையும் நான் சீராட்டி வளர்க்கவில்லை. அதற்கான தேவையும் என்னிடம் இல்லை. இதை உங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு போய் கூறுங்கள். எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள், கலாசார விடயங்களில் தலையிட்டு, வன்முறைகளை பிரயோகிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக மதகுரு ஒருவர் தலையீடுகளை மேற்கொள்கிறார். அவரே வடக்கில் இனவாத நடவடிக்கைகளை தூண்டிவிடுகிறார். தற்போதைய அரசாங்கமானது சகல பகுதிகளுக்குமுரிய அரசாங்கம் ஆகும். எந்த பகுதியிலுள்ள மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட அனுமதி வழங்கமாட்டோம். முஸ்லிம் அமைச்சர்கள் தமது சமூகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படும். எதிர்வரும் வாரங்களில் ஒவ்வொரு வாரமும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டவும் இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை இச்சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பு திருப்த்திபடும்படியாக அமைந்திருந்ததாக கூறியதுடன், முஸ்லிம் சமூகத்தின் கவலைகள், ஆத்திரங்களை ஜனாதிபதி புரிந்தும் கொண்டிருப்பாரென கூறிப்பிட்டன.
இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் முஸ்லிம் அமைச்சர்கள் இச்சந்திப்பில் பலமுறை பொதுபல சேனா என பெயர் குறிப்பிட்டு குற்றம்சாட்டிய போதும், ஜனாதிபதி மஹிந்தவோ எந்த சந்தர்ப்பத்திலும் பொதுபல சேனா என்று பெயர் குறிப்பிடாது இனவாத அமைப்புக்கள் என்றே பொதுப்படையாக குறிப்பிட்டதாக அறியவருகிறது.

No comments:

Post a Comment