Monday, March 25

வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முஜிபுர் ரஹ்மான்!

Mujeburahman
இனவாதிகளினால் தென்னிலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கண்டித்தும் அம்முஸ்லிம்களை பாதுகாக்குமாறு கோரியும் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தாலில் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் முழுமையாக பங்கேற்று தமது ஆதரவை வழங்கியமைக்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவருமான முஜிபுர் ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மெட்ரோ மிரர் செய்திச் சேவைக்கு அவர் மேலும் கூறியதாவது;
“வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. தலைநகரிலும் சில கடைகள் மூடப்பட்டுள்ளன.
எனினும் கொழும்பில் பொலிசார் வர்த்தக நிறுவனங்களுக்கு சென்று கடைகளை மூடினால் நிரந்தரமாக மூட வேண்டி வரும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் வாதிகள் சிலரும் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் பொது பல சேனா ஹிஜாப் தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ளும் பட்சத்திலும் அவர்கள் இவ்வாறானதொரு முடிவையே எடுப்பார்கள் என்பதையே புலப்படுத்துகின்றனர்.

எனினும் வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம்கள் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் அரசுடன் இருந்தாலும் மக்கள் அரசுடன் இல்லை என்பதை அவர்கள் ஹர்த்தால் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதன் மூலம் முஸ்லிம்களின் ஒற்றுமையும் பலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்க முடிந்துள்ளது.
இதற்காக வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

1 comment: