Monday, March 25

ஹலால் அறிவித்தலை அகற்ற முடியாது ! பதுளை ஹோட்டல் உரிமையாளர் BBS க்கு பதில்



10 வருடங்களுக்கு மேல் கடைக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் ஹலால் அறிவித்தலை அகற்ற முடியாது என பதுளை ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் பொது பல சேனா பிரதிநிதிகளை திருப்பியனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் தீவிரமாகிவரும் ஹலால் எதிர்ப்பின் விளைவாக பதுளையில் பிரபலமான இந்த ஹோட்டலில் ஒட்டப்பட்டிருக்கும் ஹலால் அறிவித்தலை அகற்றும்படி கோரி அங்கு வருகை தந்திருந்த பொது பல சேனா பிரதிநிதிகளுக்கு வெளிநாட்டில் இருக்கும் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என அடம் பிடித்ததால் அவரை தொடர்பு கொண்டுள்ளார் நிர்வாகி.

அதனைத் தொடர்ந்து உங்கள் கடையில் ஏன் ஹலால் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது என பொது பல சேனா பிரதிநிதிகள் வினவியுள்ளனர். அதற்குப் பதிலளித்த ஹோட்டல் உரிமையாளர், நான் முஸ்லிம் மக்களோடு ஒன்றாகப் படித்து, விளையாடி ஒன்றாக வளர்ந்தவன். எனது நண்பர்கள் இங்கு வந்து உணவருந்த வேண்டும் அவர்கள் உணர்வுகளையும் விருப்பத்தையும் மதிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே ஹலால் உணவு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளேன்.
அத்துடன் ஹோட்டலுக்கான மாமிசங்களை விநியோகிப்பவரும் ஒரு முஸ்லிமே எனவே அது அங்கே தான் இருக்கும், இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லையென அவர் கூறியதையடுத்து, பொது பல சேனா பிரதிநிதிகள் எச்சரித்ததாகவும், முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என இவர் பதிலளித்ததோடு எக்காரணம் கொண்டும் அதை அகற்ற முடியாது என இவர் கூறியதோடு ஹோட்டலில் இன்னொரு பகுதியில் மது பானம் விற்கப்படுகிறது, அங்கு வருபவர்களும் மாமிசம் அதுவும் ஹலால் மாமிசம் இதுவரை உண்ணத்தான் செய்தார்கள், அவர்கள் எல்லோரும் சிங்களவர்கள் தான் என எதிர்த்துக் கருத்துக் கூறியதாகவும் எமது இணையத்தள நிர்வாகத்தாரோடு தொடர்பு கொண்ட போது கருத்து வெளியிட்டுள்ளார்.
சமூகப் பற்றோடு வாழும் இவர் போன்றவர்கள் போற்றப்பட வேண்டிய அதே வேளை அவர்களை அடையாளப்படுத்தி மேலதிக சிக்கல்களை அவர்களுக்கு உருவாக்கக்கூடாது எனும் நோக்கில் நிறுவனம் மற்றும் உரிமையாளர் விபரங்கள் தவிர்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment