Monday, May 7

அரசின் புலிக்கொடி பிரசாரம் தோல்வி!- ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க

 
[ திங்கட்கிழமை, 07 மே 2012, 01:41.57 AM GMT ] [ வீரகேசரி ]
யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கட்சி நடத்திய கூட்டு மே தினத்தின் வெற்றியை திசைதிருப்ப அரசாங்கம் மேற்கொண்ட “புலிக் கொடி' பிரசாரம் தோல்வியடைந்துவிட்டதென ஐ.தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ஐ.ரி. என்.தொலைக்காட்சியின் பொய்யான பிரசாரத்திற்கு மத்தியில் தனியார் ஊடகங்களின் உண்மைத் தன்மைக்கு எமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க எம்.பி இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது மே தினத்தில் புகுந்து புலிக் கொடிகளை காட்சிப்படுத்தியவர்கள் யாரென்ற உண்மை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த ஒளிப்பதிவு நாடாவை இரகசிய பொலிஸாடம் ஒப்படைத்து அந்நபர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவர்கள் வெளியிட்ட உண்மைகளை நாம் வெளியிடுவோம்.
ஐ.ரி.என். தொலைக்காட்சியிலேயே புலிக்கொடி காட்சிப்படுத்தப்பட்ட செய்தி ஒளிபரப்பப்பட்டது. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதென கட்சியின் செயலாளர் ஐ.ரி.என். தலைவர் ரொஸ்மண்ட் சேனாரத்னவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ள ரொஸ்மண்ட் சேனாரத்ன, ஐ.ரி.என். தொலைக்காட்சியை சேர்ந்த எவரும் மேதினத்தன்று யாழ்ப்பாணம் செல்லவில்லையென்றும், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட ஒளிநாடாவே ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவித்து எமது கட்சி செயலாளருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
வடக்கையும் தெற்கையும் இணைத்து எமது மேதின வெற்றியை புலிக்கொடியை பயன்படுத்தி கொச்சைப்படுத்த முனைந்த அரசாங்கமே இறுதியில் மே தினத்தை பாராட்டும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இவ்விடயம் தொடர்பிலும் மே தினத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களையும் வெளியிட்ட தனியார் ஊடகங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

No comments:

Post a Comment