ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலானா அரசாங்கத்தில் அமைச்சர்கள் தங்கள்
அதிகாரத்தை வெளிக்காட்டிக் கொள்ள ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் போக்கு
அதிகரித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் அதாவுல்லாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மறுபுறத்தில் அமைச்சர் அதாவுல்லா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி
அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.
அந்த வரிசையில் தற்போது அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கிடையிலான அதிகார மோதல் வெடித்துள்ளது.
இதன் பின்னணியில் அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பான விவகாரம்
மற்றும் அமைச்சரவை இலாகா போன்ற விடயங்கள் உள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த
மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின்
கட்டுப்பாட்டில் மின்சாரத்துறை இருந்தபோது அவர்தான் மின்கட்டண உயர்வு
தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர்
பவித்ரா வன்னியாரச்சி மூளை பிசகிய நிலையில் கண்டபடி உளறுவதாக ஆத்திரத்தை
வெளிக்காட்டியுள்ளார்.
மறுபுறத்தில் மின்சக்தி, எரிபொருள் அமைச்சராக சம்பிக்க இருந்தபோது
அணுசக்தித்துறை அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அந்த அமைச்சுப்
பொறுப்பில் பவித்ரா வன்னியாரச்சி இருக்கிறார்.
சம்பிக்க ரணவக்கவுக்கு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் தான் அணுசக்தித் துறைக்கும் பொறுப்பாக இருப்பதாக அவர் உரிமை கோரி
வருகின்றார். தனது அமைச்சரவை கடிதத் தலைப்புகளையும் அவ்வாறே பயன்படுத்தி
வருகிறார்.
இந்த விவகாரம் ஜனாதிபதி வரை போனதன் காரணமாக அணுசக்தித் துறை சம்பிக்க
ரணவக்கவுக்கு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக அதிவிசேட வர்த்தமானி
அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.
இதன் காரணமாக அவருக்கும், அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சிக்கும் இடையிலான
மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய
வருகிறது.
No comments:
Post a Comment