ஸ்வீடனின் ஸ்டொக்ஹோம் பள்ளிவாசலுக்குள் மூன்று பெண்கள் அரை நிர்வாணப்
போராட்டம் நடத்தியுள்ளனர். சர்வதேச பெண்ணிய குழுவான பெமினின் அங்கத்தவர்களே
இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இவர்கள் பொலிஸாரினால் பள்ளிவாசலில்
இருந்து அகற்றப்பட்டனர்.
ஹிஜாப் அணிந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்த பெண்கள் ஆடையை களைந்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஏ. எப். பி. செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களது
உடலில், ‘எகிப்து மற்றும் உலகுக்கு ஷிரிஆ தேவையில்லை’, ‘எனது உடல்
என்னுடையது, யாருடைய கெளரவத்திற்கானதும் அல்ல’ போன்ற வாசகங்கள்
எழுதப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள், ‘பெண்களை விடுதலை செய்’, ‘ஷிரிஆ
தேவையில்லை’, ‘துன்புறுத்தல்களை நிறுத்து’ போன்ற கோஷங்களையும்
எழுப்பியுள்ளனர்.
எனினும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது பள்ளிவாசல் வெறுமையாகவே இருந்ததாகவும்
அந்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலின் பணியாளர்களும் ஊடகவியலாளர்களுமே அங்கு
இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எகிப்து நாட்டு செயற்பாட்டாளர்
அலியா அல் மஹ்தி என்ற பெண்ணும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இவர் எகிப்து சமூக அமைப்புக்கு எதிராக தனது நிர்வாண புகைப்படத்தை
இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவராவார். கடந்த 2008 ஆம்
ஆண்டு உக்ரைனில் ஆரம்பிக்கப்பட்ட பெமின் அமைப்பு தம்மை கடும்போக்கு
பெண்ணியவாதிகளாக அடையாளப்படுத்துகின்றது. இவர்கள் பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி அரைநிர்வாண
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment