Wednesday, June 26

அல் அக்ஸா பள்ளிவாசலை தகர்த்து, யூத கோயிலை அமைக்க திட்டம்..?

  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஆக்கிரமிப்பு ஜெரூசலத்தின் புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் இஸ்ரேல் புதிய அகழ்வு நடவடிக்கைகளை கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்ததாக பலஸ்தீன ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அல் அக்ஸா வளாகத்தின் தென்பகுதியில் இருக்கும் அல் மகாரிப் வாயில், கிழக்கு பகுதியில் இருக்கும் உமையத் அரண்மனைகள் மற்றும் வதி ஹில்வா நுழைவாயில் பகுதிகளில் அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நன்கொடை மற்றும் மரபுரிமைகளுக்கான அல் அக்ஸா ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. புதிய அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்று தளங்களும் ஜெரூசலத்தின் பழைய நகரில் அமைந்துள்ளது.
அகழ்வு நடவடிக்கைகளுக்காக பாரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது அல் அக்ஸா பள்ளிவாசலின் அடித்தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனினும் இங்கு தோண்டும் பணிகள் இரவு வேளைகளில் கூடாரங்கள் மற்றும் பிளாஸ்டிக் காகிதங்களால் மூடப்பட்டே முன்னெடுக்கப்படுகிறது என இந்த பகுதியை கண்காணித்த அல் அக்ஸா ஸ்தாபன குழு குறிப்பிட்டுள்ளது.
தோண்டும் பணிகள் இடம்பெறும் பகுதிகளில் பெண்களுக்கான யூத கோயில், ஓய்வறை வசதி, பொலிஸ் நிலையம், சுற்றுலா மையம், இரும்பு படிகளுடனான பாலங்கள் போன்ற வசதிகளை அமைக்க இஸ்ரேல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அல் அக்ஸா பள்ளிவாசலை தகர்த்து அந்த இடிபாடுகளுக்கு மேல் இரண்டாவது கோயில் என்று அழைக்கப்படும் யூத கோயிலை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மேற்படி பலஸ்தீன ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இஸ்லாமிய நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரான திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் என்று இஸ்ரேலின் செயற்பாட்டை அந்த அமைப்பு விபரித்துள்ளது.
ஐ.நா. மரபுரிமை அமைப்பான யுனெஸ்கோ தூதுக்குழுவின் ஜெரூசலம் விஜயத்தை இஸ்ரேல் கடந்த மே மாதம் ரத்துச் செய்தது. கடந்த 1981 ஆம் ஆண்டில் உலக மரபுரிமை சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்ட ஜெரூசலத்தின் பழைய நகரை கண்காணிக்கவே யுனெஸ்கோ தூதுக்குழு அங்கு செல்ல திட்டமிட்டிருந்தது.

No comments:

Post a Comment