Sunday, June 30

அரசிலிருந்து மு.கா. விலக வேண்டும் என நினைப்பது கோவணத்தை தலைப்பாகையாக அணிவது போன்றது: ஹக்கீம்






அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் என்று நீதிஅமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார்.

(30.6.213) இன்று கண்டியில் நடந்த கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-


ஒருவருக்கு தலையை மூடவும் வேண்டும். அதே நேரம் இருக்கும் சிறிய துணியைக் கொண்டு தனது மானத்தை பாதுகாக்கவும் வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் தனது கோவணத்தை கழற்றி தலைப்பாகை அணிய மாட்டார். அதுபோல இருக்கின்ற சொற்ப அங்கத்தவர்களையாவது நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய வேறொன்றை மறைப்தற்கு அதனைப் பயன் படுத்த முடியாது. மானம் மிக முக்கியம். இதுபோல எமது கட்சிக்கும் சமூகத்திற்கும் எது முக்கியமோ அதனைத்தான் நாம் செய்ய வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி தமது கபட நாடகத்தை அரங்கேற்ற பலர் காத்து நிற்கின்றனர். சில பேரினவாத சக்திகள் எம்மை இரண்டாகக் கூறுபோட திட்டமிட்டுள்ளனர். அப்படியான பேரினவாத சக்திகளுக்கு தீனிபோடும் வேலையை நாம் செய்ய முடியாது.

நான் அமைச்சரவையில் பேசுவதை பொதுக் கூட்டத்தில் பேசமுடியாது. எனக்கென்று ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு. அதனை நான் பாதுகாக்கவேண்டும். எனவே பேசவேண்டிய இடத்தில் நான் பேசுவேன். அதற்காக வலியப்போய் வம்பைத்தேடிக் கொள்ளத் தேவையில்லை.

முஸ்லிம் நாடுகளின் ஒன்றியத்தின் தூதுவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒருசிலர் ஏதோ உளறியபோதும் நான் மௌனியாக இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். நான் முன்யோசனை இன்றி எதனையோ பேசி எனது நாட்டையும் இனத்தையும் காட்டிக் கொடுக்கமுடியாது. அங்கு நடந்தவற்றை அதில் கலந்து கொண்ட தூதுவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

நான் ஜனாதிபதிக்கு இராஜ தந்திரத்தை சொல்லிக் கொடுக்க வேண்டுமென சிலர் நினைக்கின்றனர். அவருக்கு அதுவெல்லாம் தெரியும். இந்த நாட்டு முஸ்லிம்கள் எமது பிரஜைகள். அவர்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டால் அதனை நான் பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன் என்று அன்று முஸ்லிம் நாடுகளின் ஒன்றியத்தின் தூதுவர்கள் முன் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு யாப்பு உண்டு. சட்டதிட்டம் உண்டு. அதனை யாரும் மீறினால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நடவடிக்கை எடுப்பது கட்சித் தலைமையின் பொறுப்பு என்றார்.

No comments:

Post a Comment