Saturday, June 29

உலகின் புதிய அச்சுறுத்தலாகப் பலம்பெற்றுவரும் ‘பௌத்த பயங்கரவாதம்’


மதங்களுக்கிடையேயான மோதல்கள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படும் இன்றைய நிலையில், உலக நாடுகள் சிலவற்றில் பலம்பெற்றுவரும் ;பௌத்த தீவிரவாதம்’ குறித்து அமெரிக்க வார சஞ்சிகையான ‘ரைம்’ ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ரைம் சஞ்சிகை, தனது ஜுலை மாதத்திற்கான இதழின் அட்டைப் படத்தில் பார்மிய பௌத்த வன்முறைக் கும்பலின் தலைவரான விராது தேரரின் புகைப்படத்தைப் பிரசுரித்து, அவரை ‘பர்மிய பின்லாடன்’ என்று குறிப்பிட்டுள்ளது. ஆசிய நாடுகள் சிலவற்றில் வளர்ந்துவரும் பௌத்த தீவிரவாதத்தை விபரித்துள்ள அந்தக் கட்டுரையில், இலங்கைத் தீவில் பெருகிவரும் பௌத்த வன்முறைகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
வெறுமனே படிப்பதற்கான செய்தியாக அல்லாமல், ஒரு எச்சரிக்கையாகவே ரைம் சஞ்சிகை இதனைப் பிரசுரித்துள்ளது. கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை ஆகிய பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் அங்கு வாழும் சிறுபான்மை மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற பௌத்த மேலாண்மை வன்முறைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கைத் தீவில் வளர்ந்து வரும் பௌத்த தீவிரவாதம் குறித்து வெளியார் எவரும் சொல்லித் தெரியும் நிலையில் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் இல்லை. சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனையின் விளைவாகவே தமிழ் – சிங்கள முரண்பாடுகள் கூர்மை பெற்றன. அது ஆயுத மோதலாக வளர்ந்து, முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் பின்னரும் முற்றுப்பெற்றுவிடவில்லை. தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தல்களும், நில அபகரிப்புக்களும், தமிழர் பிரதேசங்களில் பெருகிவரும் பௌத்த பிரசன்னங்களும் இதனைத் தெளிவாகவே உணர்த்துகின்றன.
இலங்கைத் தீவின் இனப் பிரச்சினையின் ஆரம்ப காலங்களிலும், ஆயுத போராட்ட காலங்களிலும் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமக்கான வாய்ப்புக்களாகக் கருதிய இஸ்லாமிய தமிழ்த் தலைமைகள் சிங்களத்தின் பக்கம் நின்ற தவறான முடிவுகளின் விழைவுகளை இஸ்லாமிய சமூகம் தற்போது உணர ஆரம்பித்துள்ளது. அரச பயங்கரவாதத்தினால் மௌனிக்க வைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்திடம், இதற்கும் மேலாக இழப்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில், பௌத்த தீவிரவாதம் இஸ்லாமிய சமூகம் நோக்கி நகர்கின்றது. இது, தமிழர்களது பட்டறிவினால் எதிர்பார்க்கப்பட்டதே.
வளம் குன்றிய நிலப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களது பொருளாதாரம் உத்தியோகத்தைச் சார்ந்ததாக உயர்ந்த காலத்திலேயே பௌத்த தீவிரவாதம் தமிழர்களது கல்வி நோக்கியும், பொருளாதார நலன்களை நோக்கியும் கரங்களை விரித்தது. அந்த பௌத்த தீவிரவாதத்தை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் பலமிழந்த பின்னர், அந்த மண்ணிலிருந்து தப்பி ஓடுவதைத் தவிர எந்த மார்க்கமும் தமிழர்களிடம் எஞ்சியிருக்கவில்லை.
தமிழர்கள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று நம்பும் பௌத்த தீவிரவாதம், தற்போது இஸ்லாமியர்களது பொருளாதார வளர்ச்சி மீது தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. அண்மைக் காலமாக, இஸ்லாமிய மக்கள் மீதான பௌத்த தீவிரவாக அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இஸ்லாமியர்களது மத நம்பிக்கையில் பின்பற்றப்படும் ‘ஹலால்’ மீது குறி வைத்த பௌத்த தீவிரவாதம், அவர்களது வாழ்விட, வழிபாட்டு, கலாச்சார, பண்பாட்டு உரிமைகள் மீதும் வன்முறைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த வாரத்தில், மாடுகளை இறச்சிக்காக வெட்டுவதற்கு எதிராக பொதுபல சேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பு நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் இறுதி நாட்களில், இஸ்லாமியர்கள் தங்களது இறைச்சிக் கடைகளைப் பூட்டிவிட்டு, ஒதுங்கி நிற்கும் நிலை உருவானது. இறுதி யுத்தத்தின்போது ஒன்றரை இலட்சம் மனிதர்கள் சிங்களப் படைகள் வெறித்தனமாகப் படுகொலை செய்ததை பௌத்தத்தின் பெயரால் நீதியாக ஏற்றுக்கொண்ட தேரர்கள், மாடு கொல்லப்படுவதாக ஓலமிடுவது இஸ்லாமியர்கள் மீதான தமது வன்முறைகளுக்கு நியாயம் தேடுவதற்காக மட்டுமே.
இந்த நிலையில், ‘ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாங்கள் இந்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் என்ற ரீதியில் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம். அத்துடன் இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்துவிரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்பு குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப்படு;ம்’ என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிரான கருத்துக்களோ, கண்டனங்களோ அரச தரப்பிலிருந்து எழவில்லை. எழப் போவதும் இல்லை. இவ்வாறு, சிங்கள அரச தரப்பினரால் ஊட்டி வளர்க்கப்படும் ‘பௌத்த தீவிரவாதம்’ இலங்கைத் தீவின் அமைதிக்குத் தொடர் அச்சுறுத்தலாகவே இருக்கப்போகின்றது. இன்னொருமியான்மாராக இலங்கைத் தீவு உருவாகுவதற்கு முன்னர் இஸ்லாமிய சமூகம் விழித்தெழவேண்டும்.
 சுவிசிலிருந்து கதிரவன்

No comments:

Post a Comment