Saturday, June 29

“13″ மசோதா பாராளுமன்றம் வரும்போது திவிநெகும போன்று ஹக்கீமும் ஆதரிப்பார்!


Mubarak13வது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருப்பதன் மூலம் அக்கட்சியின் தலை முதல் கால் நுணிவரை சுயநலமே உள்ளது என்ற எமது குற்றச்சாட்டு மீண்டும் உறுதியாகியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
இது பற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது;
“13வது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதில்லை என மு. கா.வின் உயர்பீடம் முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் அண்மையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அப்படியிருந்தும் மேற்படி மாகாண சபை உறுப்பினர்கள் திருத்தத்துக்கு ஆதரவளித்தமையானது அக்கட்சியினரின் சமூகம் பற்றிய அறியாமையையும் மு. கா.வினரின் வழமையான சுயநல அரசியலையுமே காட்டுகிறது.

தலைவர் ஒன்றைச் சொல்ல இவர்கள் வேறு விதமாக நடந்து கொண்டுள்ளார்கள் என்றால் இதற்கு பிரதான காரணம் மு. கா தலைமையின் சுயநலத்தை அவர்கள் தெரிந்து வைத்திருப்பதாகும்.
திவிநெகும சட்டமூலம் கிழக்கு மாகாண சபைக்கு வந்தபோது மு. கா.வின் அனைத்து உறுப்பினர்களும் விழுந்தடித்துக் கொண்டு அதற்கு ஆதரவளித்து அரசுக்கு தமது விசுவாசத்தை காட்டினர். பின்னர் அதற்கெதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டதோடு ஹக்கீம் தலைமையில் விசாரணை குழுவும் நியமிக்கப்பட்டது.
இதனை திருடர்களை விசாரிக்க திருட்டுக்கூட்டம் நியமனம் என நாம் கூறியிருந்தோம். அதன் படி எந்த விசாரணையும் நடக்காததோடு பாராளுமன்றத்தில் இச்சட்டம் வந்த போது இதற்கு ஆதரவாக ஹக்கீமும் மற்றவர்களும் ஆதரவளித்து தமது சொந்த சுயநலன்களுக்காக சமூகத்தை விற்றனர்.
இப்போதும் 13வது திருத்தத்தை திருத்தும் பிரேரணை பாராளுமன்றத்துக்கு வந்தால் நிச்சயம் ஹக்கீமும், மற்ற உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிப்பர் என்ற உண்மையை புரிந்தே மாகாண சபை உறுப்pனர்கள் முன்கூட்டியே ஆதரவளித்துள்ளனர்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தை விற்றுப்பிழைக்கும் ஒரு கட்சி தேவைதானா என்பதை முஸ்லிம் சமூகம் உணராத வரை மென்மேலும் இத்தகைய காட்டிக் கொடுப்புக்கள் தொடரவே செய்யும். அதன் பின் தேர்தல் வந்தால் இந்த அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட்டது என ஒப்பாரி வைப்பார்கள். ஆனாலும் அவர்களின் சாக்குகள் நன்றாக நிறைந்திருக்கும் என்பதை புரியாத சமூகம் மீண்டும் மாலை போட்டு ஏமாறும்.
இதற்கிடையில் 29 ஆம் திகதியுடன் அரசிலிருந்து மு. கா வெளியேறும்
என வழமை போல் கூறிய மு. கா செயலாளர் ஹசன் அலி, பின்னர் தமது கருத்தை மாற்றி ஜனாதிபதி வெளியேற்றினால் வெளியேறுவோம் என கோமாளித்தனமாக கூறியுள்ளார். இவர்களை வெளியேறும் படி சொல்லும் அளவு ஜனாதிபதி அரசியல் அனுபவமற்றவர் அல்ல.
ரோசம், மானம் உள்ளவர்களுக்கு நாவால் சொல்ல வேண்டியதில்லை, சைக்கிணையே போதுமானதாகும். ஆனாலும் மு.கா.வை உதைத்தாலும் அரசிலிருந்து வெளியேறாது என்பதும்; அக்கட்சியை வைத்துக் கொண்டே முஸ்லிம் சமூகத்தின் அனைத்து உரிமைகளையும் இல்லாமலாக்கும் காரியமும் மிக சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.
ஆக மொத்தத்தில்; கோமாளித்தனமாகவும், சுயநலம் தவிர வேறு கொள்கையின்றி அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரசைப் போன்ற ஒரு கட்சியை இந்த நாட்டின் வரலாறு கண்டதில்லை என்பதுதான் வரலாற்று உண்மையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment