Friday, June 28

13 ஆவது திருத்தம் முஸ்லிம்களின் விருப்புடன் நிறைவேற்றப்பட்டதல்ல: ரிஷாட்




13வது திருத்தச் சட்டம் இலங்கை முஸ்லிம்களின் விருப்பத்தோடு நிறைவேற்றப்பட்ட சட்டமல்ல. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதாகும். இச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சாதக பாதகம் உள்ளது. இது பற்றி ஆராயப்பட வேண்டியுள்ளது.
இச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மையினரின் நலன் கருதி யோசனைகளை முன்வைக்கும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் விடிவௌ்ளிக்குத் தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வகையிலான யோசனைகளை முன்வைக்கும் என வினவியபோதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரு மாகாணங்கள் தாம் விரும்பினால் இணைந்து கொள்ளலாம் என்ற சட்டவிதியில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி முன்வைத்துள்ள ஆலோசனைக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவ்விடயம் தொடர்ந்தும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் விடயத்திலே ஆளும் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் எமது கட்சி தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறது. எமது யோசனைகள் சிறுபான்மை சமூகத்தின் நலன்களைப் பாதிக்காத வகையிலேயே அமையும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment