Friday, May 17

பௌத்தர்களின் எதிர்ப்பை முஸ்லிம்கள் எதிர்கொண்ட முறை பாராட்டுக்குரியது - அசோக் கே. காந்தா

asok k kandaகடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிட்ட முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட முறை பாராட்டுக்குரியது என தனது பதவிக் காலத்தை முடித்து தாயகம் திரும்பும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்தார்.
தாயகம் திரும்பும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் புதனன்று இரவு தனது இல்லத்தில் அளித்த பிரியாவிடை விருந்துபசாரத்தின் போதே இந்தியத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் இந்த எதிர்ப்பினை எதிர்கொள்வதில் தூரநோக்குடன் செயற்பட்டார்கள் என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

தனது பதவிக் காலத்தில் வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதற்கு பல வகையிலும் உதவ முடிந்தது எனத் தெரிவித்த அவர், இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கினை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
அகதிகளை பழைய அகதிகள், புதிய அகதிகள் எனப் பிரித்துப் பார்த்து வீடுகளைப் பகிர்ந்தளிக்க மேற்கொண்ட முயற்சியை தான் அங்கீகரிக்காததனால் முஸ்லிம்களுக்கு வீடுகள் கிடைக்க வழி கிடைத்தது என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
தனது பதவிக்காலத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் மிக நெருங்கிச் செயற்பட வாய்ப்புக் கிடைத்தது. இதன்மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவினை மேம்படுத்த முடிந்ததோடு, வட பகுதியில் மீளக்குடியேறும் மக்களுக்கு பல வகையில் இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது என்றார்.
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி உட்பட ராஜதந்திரிகள் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment