Monday, May 20

முஸ்லிம்களுக்காக அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியவும் முஸ்லிம் அமைச்சர்கள் தயார்! - ஹிஸ்புல்லா

முஸ்லிம்களுக்காக அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியவும் முஸ்லிம் அமைச்சர்கள் தயார்!


பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன். அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் செய்ய தவற மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற் கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், இந்த நாட்டு முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தை நிதானத்துடன் வழி நடத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூக சமய தலைவர்களுக்கு உண்டு.

முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட அதிகமான பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரலாம், பாரிய சவால்கள் ஏற்படலாம். எந்த பிரச்சினை வந்த போதும் நாம் பொறுமையாகவும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்´ என்றார்.

´நமது இன்னுமொரு சமூகம் கடந்த முப்பது வருடங்கள் போராடி அழிவைத்தான் பெற்றுக்கொண்டது என்ற வரலாற்றுப் பாடத்தை நாம் பார்க்க வேண்டும். ஜனநாயக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடிய அந்த சமூகத்தின் இறதி பெறுபேறு பூஜ்யத்தில்தான் முடிந்துளளது என்பதை நாம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்´ என்றும் அவர் குறிப்பிட்டார்.

´இந்த நாட்டு முஸ்லிம்கள் வடக்கு கிழக்கிலும் வடக்கு கிழக்குக்கு வெளியேயும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். வடக்கிலே இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற முயடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு வடக்கில் ஒரு கிராமத்திலிருந்து மாத்திரம் 300 முஸ்லிம் குடும்பங்கள் இடம் பெயர்ந்திருந்திருந்தால் இன்று அது 500 குடும்பங்களாக வளர்ச்சியடைந்துள்ளன.

இந்த குடும்பங்கள் தமது சொந்த நிலத்தில் சொந்த இடங்களில் குடியேற முடியாதளவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கிலுள்ள தமிழ் நிருவாக அதிகாரிகளும் தடுக்கின்றனர். முஸ்லிம்களை அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற்ற சென்றால் தமிழர்களின் காணிகளை சுவீகரிக்க வருகின்றனர் எனக் கூறி சத்தியாக்கிரகங்களை நடத்துகின்றனர்´ என்றார்.

´வடக்கில் வசதியுடன் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து இன்று மீள குடியமரும்போது பல்வேறுபட்ட சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொத்து வருகின்றனர். குடிப்பதற்கு குடி நீர் கிணறுகளை அமைத்து தாருங்கள் என்று கேட்கின்றனர். ஆடு மாடுகள் கூட வாழ முடியாத குடிசைகளில் இன்று அவர்கள் வடக்கிலே வாழ்ந்து வருகின்றனர்´ என்றார்.

´முஸ்லிம்களுக்கு பாதகம் ஏற்படுமானால் அமைச்சுப் பதவிகளை தூக்கியெறியவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஆயத்தமாக உள்ளனர். அமைச்சுப் பதவிகளை அரவணைத்துக்கொண்டு இருக்க வேண்டுமென யாரும் விரும்பவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் சிலர் விமர்சிக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து முஸ்லிம்களின் விடயத்தில் அனைவருடனும் ஒன்று பட்டு பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது

நாம் பௌத்த அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றோம் எதையும் பேசியே தீர்க்க வேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும் அவற்றை ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக உணர்ச்சிகளை தூண்டி அறிக்கைகளை விட்ட எதையும் சாதிக்க முடியாது´ எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment