Monday, May 20

பௌத்த தீவிரவாத அமைப்புகள் மு.காவை அரசிலிருந்து வெளியேற்ற காத்திருக்கின்றன - ஹக்கீம்

நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சில சிங்கள, பெளத்த தீவிரவாத அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்துள்ள இன்றைய சூழ் நிலையில் உள்நாட்டு அரசியல் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றன என நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
கடந்த சனிக்கிழமை குருனாகல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற கூட்டங்களின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
 
அரசாங்கத்தை விட்டு முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றுவதுதான் சர்வரோக நிவாரணி என சில சக்திகள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அக் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், சங்கீத கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை காலி செய்து விட்டுச் செல்வது போன்று எடுத்த எடுப்பிலேயே அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் தமது கட்சி ஈடுபட வேண்டும் என அச் சக்திகள் வழி பார்த்து இருப்பது தவறு என்றும் கூறினார்.
 
அத்துடன் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்துகொண்டு உரிமைகளுக்காக குரல் எழுப்புவதை விட தாமும் தமது கட்சியினரும் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே உரிமைகளுக்காக போராடுவது அதிகமான தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
தற்பொழுது அரசாங்கம் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கு நாடுகள் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அரசின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்து அதனை வீழ்த்துவதற்கு கங்கணம்கட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சில சிங்கள, பெளத்த தீவிரவாத அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்துள்ள இன்றைய சூழ் நிலையில் உள்நாட்டு அரசியல் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றன.
 
அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய ஒத்துழைப்பின் ஊடாக அரசு முக்கிய விடயங்களையும் சாதித்துக் கொண்டதும் எல்லோரும் அறிந்த செய்தியாகும். இவ்வளவும் செய்து விட்டு நாங்கள் இந்த அரசாங்கத்தை விட்டு வலிந்து வெளியேற முடியாது எங்களை பகைத்துக் கொண்டும் அரசாங்கத்தை தக்க வைக்க முடியாது.
 
யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து வெற்றிவிழா கொண்டாடப்படுகின்றது. ஆனால் யுத்தத்தின் பின்னர் இன்னமும் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவில்லை என்பதை சர்வதேச சமூகம் சுட்டிக் காட்டுகின்றது.
 
வட கிழக்கு மாகாண கரையோர பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் பலவற்றை வெவ்வேறு காரணங்களைக் காட்டி ஆயுதப் படைகள் சுவீகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல அவ்வாறு கையகப்படுத்தப்படும் சில காணிகளில் கபானாக்கள் எனப்படும் சுற்றுலா கொட்டில்கள் கூட அமைக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
 
கிழக்கு மாகாணத்தில் பள்ளிவாசல்களுக்கும், மத்ரஸாக்களுக்கும் சென்று உலமாக்களையும் முக்கியஸ்தர்களையும் விசாரணைக்காக இராணுவத்தினர் முகாம்களுக்கு வருமாறு கூறுவது விசனத்திற்குரியது. பொலிஸாருக்கு உரிய அலுவல்களில் கூட இராணுவத்தினர் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.
 
மேற்கு நாடுகள் சில கூறுவதைப் போல இங்கும் சில இனவாத, தீவிரவாத, மதவாத அமைப்புகள் மத்ரஸாக்கள் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து உருவாக்கும் இடங்கள் எனக் கூறும் அபாண்டங்கள் மனவேதனையை ஏற்படுத்துகின்றன.
 
அரசாங்கம் ஆரம்பத்திலேயே மதவாத, இனவாத, தீவிர அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நிலைமை இந்த அளவிற்கு மோசமாகி இராது. பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்த விடயத்தில் அமைதி காக்கப்படுவதாக முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment