Wednesday, May 8

குழப்பம் ஏற்படுத்த முயன்றதாலேயே அஸாத் சாலி கைது - பாராளுமன்றத்தில் பிரதமர்


அரசியல் கட்சிகளையோ தனிநபர்களையோ நசுக்குவதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது. மாறாக, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் செயற்படுவோருக்கு எதிராகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறதென பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு ஐ.தே.க. கோருவது நகைப்புக்குரிய விடயம் என்று குறிப்பிட்ட அவர், அஸாத் சாலி கைது செய்யப்பட்ட விவகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் பெற முயல்வது குறித்து கவலையடைவதாகவும் குறிப்பிட்டார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளித்த பிரதமர் மேலும் கூறியதாவது:
30 வருடங்கள் நீடித்த யுத்தம் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. கடந்த காலத்தில் தவறு செய்த ஆளும் தரப்பு எம்.பிகள் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தராதரம் பாராது கைதாகினர்.
அரசாங்கம் ஒரு போதும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசியல் கட்சிகளுக்கோ நபர்களுக்கோ எதிராக பயன்படுத்தாது. அஸாத்சாலி கைது செய்யப்பட்டதை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயல்வது குறித்து கவலையடைகிறோம். உணர்வுகளை தூண்டி நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயன்றது தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டார்.
தேசிய சுதந்திர முன்னணி செயலாளர் அஸாத் சாலி பல்வேறு சந்தர்ப்பங்களில் இனங்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களினூடாக கருத்து வெளியிட்டு வந்தவர். இதனூடாக மீண்டும் நாட்டில் அமைதியின்மை ஏற்படலாம் என புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்த தகவலின் படி சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டது. இலங்கை முஸ்லிம்கள் ஆயுதம் தூக்குவதைத் தவிர வேறு வழி கிடையாது என அஸாத் சாலி ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி இணையத் தளங்களினூடாக உலகம் முழுவதும் சென்றது. இலங்கையில் 11,21,715 முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்கள் எதுவித பிரச்சினையும் இன்றி வாழ்கின்றனர்.
உலகில் 51 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அதிகமான முஸ்லிம் நாடுகளே எமக்கு உதவி வருகின்றன. இந்த பேட்டியினூடாக முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த நாடுகள் கருதலாம்.
அஸாத் சாலியின் உரை தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர். அதனடிப்படையில் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் அவர் கைதானார். இவரை கைது செய்வதற்கு முன்னர் விசாரணைக்கு வருமாறு பல தடவை சி.ஐ.டி. அறிவித்திருந்தது. விசாரணைக்கு வராமல் மறைந்திருந்த போதே இவர் கடந்த 2 ஆம் திகதி கைதானார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாகவும் இனவாதத்தை தூண்டும் வகையிலும் செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அத்தகைய நபர்களுக்கெதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கிலாந்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டது போன்று இங்கு நீக்க முடியாது. இங்கிலாந்திற்கும் அயர்லாந்திற்குமிடையிலான பிரச்சினை தீர்ந்து விட்டது. ஆனால் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போதும் பயங்கரவாத நிழல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நிழலாடுகிறது. 
இவற்றை முறியடிக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவுகள் தேவை. புலிகள் மறைத்துள்ள ஆயுதங்களை தேடவும் புனர்வாழ்வு பெறாத புலி உறுப்பினர்களை கைது செய்யவும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் அவசியமாகிறது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்யும் கோரிக்கையை நிறைவேற்றுவது கடினமாகும்.

No comments:

Post a Comment