Friday, May 17

இது பௌத்த நாடு; ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை: பொது பல சேனா

 
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.
 
இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.
 
கொழும்பிலுள்ள சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
 
இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,
 
இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட நாடாகும். எனவே, இங்கு வாழும் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
அதனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, வெளிப்படுத்தாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதற்கான எமது போராட்டம் ஆரம்பமாகும்.
 
சர்வமத அமைப்புக்கள் இங்கு அவசியமில்லை. இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தத்தை அழித்தொழிக்கும் நிகழ்ச்சிநிரலையே முன்னெடுக்கின்றன. எனவே, இவ் அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும்.
 
தானசாலை என்ற பெயரில் பலாத்காரமாகப் பணம் கேட்டு நடத்துவது, இதன் பின்னால் மறைந்து கொண்டு மது அருந்துவது போன்றவை பௌத்த தர்மத்திற்கு மாறானதாகும். இவையனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.
 
கேளிக்கை வெசாக்கிற்கு இதுவே இறுதி வருடமாகட்டும். அடுத்த வருடம் இதற்கெல்லாம் இடமளிக்க மாட்டோமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment