அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மூன்று பாரிய இராணுவ முகாம்களை
அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக
தடுத்து நிறுத்துமாறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
வேண்டுகோள்விடுத்துள்ளது.
சாய்ந்தமருது, பொத்துவில் மற்றும் ஒலுவில்
துறைமுக வளாகம் ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு இராணுவ முகாம்கள்
அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் மூலம் 500
ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களுக்குச் சொந்தமாகவிருக்கும் ஆயிரக் கணக்கான
காணிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மு.கா.வின் தேசிய அமைப்பாளர்
ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்
சுமார் 62000 ஏக்கர் காணிகளை இழந்துள்ளதாக எம்.ஐ.எம் .முஹைதீன் கணிப்பீடு
செய்துள்ளார் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன்
அலி தெரிவித்துள்ளார் .
அவர் தெரிவித்துள்ள தகவலில் சிறுபான்மை
சமூகங்களின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்ய வேண்டுமானால் , குறித்த
பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் செறிந்த மக்கள் பரம்பளையும் அவர்களின்
இருப்பை உறுதிப் படுத்துகிற நில உடமையையும் ஐதாக்க வேண்டும் என்பதே
பெரும்பான்மை சமூகத்தில் உள்ள கடும்போக்கு வாதிகளின் தொடர்ச்சியான
நிலைப்பாடாகும் .
மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டாகப்
பிரித்து அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப் பட்டபோது சுமார் ஒரு லட்சம்
பெரும்பான்மையின சிங்கள சகோதர்களை வசிப்பிடமாக கொண்டிருந்த பிந்தனைப்
பற்று என்ற நிலப் பரப்பு சிறுபான்மை சமூகத்தினரின் பரம்பலை ஐத்தாக்கும்
நோக்குடன் மொனராகலை மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டு புதிய
அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது என்பதை நாம் மறக்க முடியாது என்றும்
அவர் செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment