Saturday, April 6

அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கட்சி மாற ஆலோசனை

ஆளும் அரசாங்கத்திலிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகர்கள் சிலர் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, மாற்றுக் கட்சியுடன் கலந்தாலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத்திலிருந்து செய்திகள் சில தற்பொழுது கசிந்து வருகின்றன.

இலங்கை முஸ்லீம்கள் மீது பொது பல சேனா அமைப்பால் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உரிமை மீறல்களை கருத்திற்கொண்டு இத்தகைய அரசியல் நகர்வுக்கு சிலர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அறியவருகிறது.
 
மக்களின் புரட்சி:
இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் விடயத்தில் குரல்வளையற்று ஒடுக்கப்பட்டிருந்த எமது முஸ்லிம் தலைவர்களை முஸ்லீம்கள் தெளிவாக இணங்கண்டு கொண்டதுடன், அதற்கான சாத்வீக போராட்டங்களை நாடு முழுவதிலும் பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருந்த கண்டன ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்களை அடுத்து, இந்நாட்டின் முஸ்லிம் மக்களின் ஒருமித்த புரட்சியை அல்லது ஆதரவை இத்தகைய அரசியல்வாதிகளும் தெளிவாக உணர்ந்து கொண்டனர்.
தனது அரசியல் பலத்தைப் பயன்படுத்தியும், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவை மேற்கோள் காட்டியும் கடந்த வார ஹர்த்தாலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட இவர்களின் அரசியல் பிரயத்தனங்களை மக்கள் காலில் போட்டு மிதித்து, சமூக ஒற்றுமையை வெளிக்காட்டி இருந்ததும் மற்றுமொரு திருப்பமாக இருக்கின்றது.
அரசாங்கத்துக்கு பொது பல சேனா அமைப்பின் துவேச போக்குகளை தாங்கள் எடுத்துக் கூறியும், ஆளும் அரசாங்கத்தால் இவ்வமைப்மை தடுக்கவோ, அகற்றவோ முடியாமல் இருப்பதும் வெளிப்படையான உண்மை எனவும், இதனால் சில முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது அரசியல் இருப்பை தொடர்ந்தும் ஆளும் கட்சியில் தக்க வைத்துக்கொள்ள அதிருப்தியடைந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.
கடந்த வாரம் சில முஸ்லிம் முழு, அரை அமைச்சர்கள் தங்களது அதிருப்பதிகளை பகிரங்கமாக தெரிவித்திருந்ததும் அவதானிக்கத்தக்கது.
அரசியல் நகர்வு:
ஆளும் அரசுக்கு பெரும் பான்மை மக்களின் ஆதரவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் விடயமாகக் கருதப்பட்டாளும், ஓர் ஆட்சியை நிறுவும் விடயத்தில் சிறுபான்மையின் வாக்குகளும் அவர்களின் உறுப்புறுமையின் பலமும் இன்றியமையாதவை.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மீண்டும் அரசியலில் களமிறங்க இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
தற்போதுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று சந்திரிகாவின் அரசாங்கத்தில் நல்ல பதவிகளில் இருந்தவர்கள் மாத்திரமன்றி, நல்ல அரசியல் உறவுகளும் சந்திரிக்காவுக்கும் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் இருந்து வந்திருந்ததை எவரும் மறக்க முடியாது.
எனினும் எந்த அரசாங்கமும் ஊழல்களின்றி இலங்கையில் ஆட்சி புரிந்ததாக சரித்திரமில்லை! ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மற்றைய அரசாங்கத்தின் ஊழல்களைத் துருவி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு தாங்கள் நல்லவர்கள் என்பதை பதவி ஏற்கும் சில நாட்களில் கூறிவிட்டு, பின்னர் இதே பல்லவியை இந்நாட்டில் மேற்கொண்டு வருவதும் கடந்த கால உண்மைகள்.
எனவே, மஹிந்த அரசாங்கத்தில் தம்பிமார்களின் கடுமையான உத்தரவுகளும், குடும்ப அரசியல் பின்னணிகளும்,  திருப்தியில்லாத அமைச்சர் பதவிகளாலும் எமது முஸ்லிம் அமைச்சர்கள் சமூக நலனை மேற்கோள் காட்டி, எதிர்காலத்தில் கட்சி தாவ இருப்பதாகவும் இரகசிய தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் தற்போது கசிந்து வருகின்றன.
இதற்கிடையில் தமிழ்-முஸ்லிம் கட்சிகளுடன் ஒன்றிணைந்து, பலத்த ஆதரவுகளுடன் மீண்டும் அரசியலில் குதிக்கவிருக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கு, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தங்களது ஆதரவுகளை எத்தருணத்திலும் வழங்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

1 comment:

  1. தம்பியா தொப்பிய கரக்கணவா -என்பது இதுதானோ

    ReplyDelete