Tuesday, April 16

மகப்பேற்றுக்காக வைத்தியசாலை செல்வது ஆபாசமா? ஹெல உறுமயவிடம் கேள்வி

yls hameedமுஸ்லிம்கள் கத்னா (சுன்னத்து) வைப்பது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய மிகவும் அநாகரிகமான முறையில் கருத்து தெரிவித்திருப்பதனை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பில் மேலும் குறிப்பிடும்போது; இனவாதத்தைக் கக்கி அரசியலுக்கு வந்த ஜாதிக ஹெல உறுமய வாக்களித்த மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாததால் அரசியல் வங்குரோத்து அடைந்த நிலையில் மீண்டும் இனவாதத்தைக் கக்குவதற்காக புதிய போத்தலில் பழைய கள்ளை ஊற்றுவதுபோல பொதுபல சேனா என்ற பெயரில் ஜாதிக ஹெல உறுமய மாறுவேடம் போட்டு சில இனவாத பிக்குகளிடம் ஒரு கொந்தராத்தைக் கொடுத்து இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
ஆரம்ப காலத்தில் பொதுபல சேனாவின் இனவாதம் சாதாரண சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியில் ஓரளவு ஊடுருவிச்சென்றது. தாங்கள் கக்குகின்ற இனவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களும் மூர்க்கத்தனமான பிரதிபலிப்பைக் காட்டுவார்கள். அதைவைத்து ஒரு இனக்கலவரத்தைத் துாண்டலாம் என்ற ஜாதிக ஹெல உறுமயவினதும், பொது பல சேனாவினதும் எண்ணத்திற்கு எதிரான விளைவுகளையே முஸ்லிம்களின் நிதானப் போக்கும், காத்திரமான முன்னெடுப்புக்களும் கொண்டுவந்ததன.

இன்று நேர்மையாக சிந்திக்கின்ற சிங்கள பௌத்த மக்களே பொதுபல சேனாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் பிரதிபலிப்பையே அண்மையில் கொழும்பு தும்முல்ல சந்தியில் பொதுபல சேனாவுக்கு எதிரான மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் நிகழ்வில் கண்டோம். மட்டுமல்லாமல் நாளாந்தம் பலதரப்பட்ட இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் படித்த சிங்கள சகோதரர்கள் தொடர்ச்சியாக பொதுபல சேனாவுக்கு எதிராக எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் பொதுபல சேனா அமெரிக்கா பறந்திருக்கின்றார்கள். அங்கு இவர்கள் தங்கியிருக்கின்ற பௌத்த ஆலயத்தின் நிருவாகிகள் இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும், இவர்களது பூஜை மற்றும் எந்தவித நிகழ்ச்சிகளிலும் தமது ஆலய பிராந்தியத்தில் வாழ் இலங்கை பௌத்தர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிவித்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இவர்களின் தாய் இயக்கமான ஜாதிக ஹெல உறுமயவினால் பொதுபல சேனா இல்லாத சிறிய இடைவெளியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தாமே களத்தில் இறங்கியதன் விளைவுதான் முஸ்லிம்கள் தொடர்பான இந்த அநாகரீக கூற்றாகும்.
இது சினிமாவில் தாய் வில்லன் தம் தளபதி்களை களத்திற்கு அனுப்பி அத்தளபதிகள் செம்மையாக வாங்கிக்கொண்டு வருகின்றபொழுது தாமே களத்திற்கு போவது போன்றதாகும். அத்தாய் வில்லன்களுக்கும் நியாயமாகச் சிந்திக்கின்ற சிங்கள பௌத்த மக்கள் தளபதிகளுக்குக் கொடுத்த சிகிச்சையையே கொடுப்பார்கள் என்பது இந்தத்தாய் வில்லன்களுக்குத் தெரியாமலில்லை. ஆனாலும், ஆற்றாமை இவர்களை அநாகரிகமாகப் பேச வைக்கின்றது.
முஸ்லிம்கள் கத்னா (சுன்னத்) வைப்பது ஆபாசம் என்றால், பெண்கள் மகப்பேற்றுக்காக வைத்தியர்களிடம் செல்வதை இவர்களது பரிபாசையில் எவ்வாறு அழைக்கலாம்? என்று கேட்க விரும்புகின்றோம். அதுவும் ஆபாசம் என்றால் இலங்கை வைத்தியசாலைகளிலுள்ள அனைத்து மகப்பேற்று பிரிவுகளையும் மூடுவதற்கு இவர்கள் பாராளுமன்றத்தில் பிரேரனை கொண்டு வருவார்களா? மகப்பேற்றுக்குச் செல்லுவது வளர்ந்த மகளிர் ஆகும். கத்னா (சுன்னத்) செய்வது சிறு குழந்தைகளுக்காகும்.
எனவே, முந்தியது ஆபாசம் இல்லை என்றால் பிந்தியது எவ்வாறு ஆபாசமாகும் என்று கூறுவார்களா? இதேபோன்று இன்னும் எத்தனையோ வியாதிகளுக்காக வைத்தியர்களிடம் செல்வதை இவர்களது பரிபாசையில் ஆபாசம் என்று சொல்ல வேண்டும். இருப்பினும் அதையெல்லாம் கேட்டு இவர்களை தர்ம சங்கடப்படுத்த விரும்பவில்லை.
அதேநேரம் கத்னா செய்வதிலுள்ள சுகாதார நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்கத்தேய நாடுகளில் கத்னா செய்வதை ஊக்கப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்ற ஒரு காலத்தில் கத்னா செய்வதிலுள்ள நலன்களை இவர்களுக்கு விளங்கப்படுத்தவும் நாம் முனையவில்லை. ஏனெனில் துாங்குகின்றவர்களைத்தான் எழுப்பலாம். அதேநேரம் நாம் அடுத்தவர்களுக்கு கத்னா செய்ய முனையவில்லை என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, சமயத்தலைவர்கள் என்பவர்கள் கண்ணியமாகப் பேசவேண்டும். நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுபவர்களாகும். அரசியல் வங்கரோத்து விரக்தியினால் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேசி தமது நிஜ நிறத்தினை மற்றவர்களுக்கு காட்ட வேண்டாம் என்றும் வேண்டுகின்றோம்
என்றுள்ளது.

1 comment: