Friday, March 29

Fashion Bug : இனவாதத்தின் அடுத்த கட்டம் ஆரம்பம் !


இனவாதத்தின் அடுத்த கட்டத்தை திட்டமிட்டே ஆரம்பித்திருக்கிறது பெளத்த பேரினவாதம்.
இதன் முதற்படியாக தி்ட்டமிட்ட ரீதியில் சுமார் 700 க்கும் அதிகமான சிங்கள இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்கியிருந்ததோடு நாட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகித்து வரும் நாகரீக ஆடை நிறுவனமான பெஷன் பக் நிறுவனத்தின் பெபிலியான கிளை மீது நேற்றிரவு இலங்கை நேரம் சுமார் 8 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சூழ்நிலை
பண்டிகைக்காலம் என்பதால் களஞ்சியப்படுத்தலில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே சுமார் 20 பெளத்த பிக்குகளோடு இணைந்து வந்திருந்த 100 – 200 வரையான காடையர் கும்பலால் இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத நிறுவன ஊழியர் ஒருவர் கருத்து வெளியிட்டார்.
இதற்கு ஏதவாக அருகில் இருந்த விகாரையில் மணியடித்து காடையர்கள் ஒன்று கூட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் அதே வேளை குறித்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட நிறுவன உரிமையாளர் தனது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவித்தார்.
முஸ்லிம் பிரதிநிதிகள்
இந்நிலையில், ஏற்கனவே பிணை மனு விவகாரத்தில் இயங்கிக்கொண்டிருந்த அஸாத் சாலி தரப்பு, ரிஷாத் பதியுதீன் மற்றும் அப்துல் சத்தார் ஆகியோருடன் சட்டத்தரணி ஷிராஸ் முனீர் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என. எம். அமீனும் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு உரிமையாளரை அணுகி தமது ஆதரவையும் தெரிவித்திருக்கின்றனர்.
இதன் போது காரியத்தில் இறங்கிய ரிஷாத் பதியுதீன் குறித்த விவகாரத்தினை பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் காவல் துறையையும் தொடர்பு கொண்டுள்ளார். இவ்வேளையில் அவருக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து  சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம் செய்த விபரத்தினை அறிய முடிந்தது.
விகாரைக்கு போய் நலம் விசாரித்த பாதுகாப்பு செயலாளர்
சம்பவம் தொடர்பாக முழு விபரம் அறிந்திருந்தும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு செயலாளர் அருகில் இருந்த விகாரைக்கு சென்று அளவளாவிச்சென்றிருந்த போதும் குறிப்பிட்ட நிறுவனப் பக்கம் வரவோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பில் யாருடனும் தொடர்பு கொள்ளவோ இல்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சட்ட நடவடிக்கை: ஒன்றிணைந்த முஸ்லிம் குரல்கள்
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இனவாதப்போக்கினை சட்ட ரீதியாக நாடுவதன் பால் முஸ்லிம் சமூகத்தின் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், கண்டியில் வைத்து பொது பல சேனா பிரதிநிதிகள் கக்கிய விஷமத்தனமான பேச்சுக்களுக்கு எதிராக தாம் வழக்கொன்றைத் தொடர்பாக நேற்று முன் தினம் முஸ்லிம் குரலுக்கு வழங்கிங நேர்காணலில் ஆஸாத் சாலியும், ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் தாம் வழக்குத் தொடரப்போவதாக கடந்த வார முஸ்லிம் குரல் நிகழ்ச்சியில் குருநாகல நகர சபை உறுப்பினர் அப்துல் சத்தாரும் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் இது பற்றி ஆராய்வதற்காக கொழும்பு சென்றிருந்த அப்துல் சத்தார் மற்றும் அஸாத் சாலி தரப்பு ஒன்றிணைந்து இது பற்றி ஆலோசித்ததாக இரு தரப்பும் எமக்கு ஊர்ஜிதம் செய்துள்ளன.
தன்னைக் கைது செய்ய குற்றப்புலனாய்வுத் துறையினர் செய்த முயற்சிக்கு எதிராக பிணை மனுவில் வெற்றி கண்ட அஸாத் சாலி தரப்பில் இயங்கும் சட்டத்தரணி ஷிராஸ் முனீருடன் இது பற்றி கலந்தாலோசித்தமையை அவரும் எமக்கு ஊர்ஜிதம் செய்திருக்கும் நிலையில் முஸ்லிம்கள் தாம் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் இவ்வாறு வழக்குகளைத் தொடர்வதன் மூலம் பொது பல சேனாவுக்கு சட்ட ரீதியான நெருக்கடிகளைக் கொடுக்கலாம் என மூத்த அரசியல் வாதியொருவர் எம்மோடு கருத்தினைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
ஏற்கனவே தகவல் திணைக்களம் பிரத்யேகமாக இரு தொலைபேசி இலக்கங்களை, குறிப்பாக முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக வழங்கியிருந்த நிலையில், வெளி நாடுகளில் இருந்து அழைப்பவர்களிடம் தொலைநகல் மூலமாக தமது முறைப்பாடுகளை வழங்குமாறு ஒரு சில நேரங்களில் வேண்டப்பட்டதாகவும் சிலர் எமது இணையத்தோடு தொடர்பு கொண்டு தகவல் வழங்கியிருந்தனர்.
எனினும், இன்னும் அதிகமான முறைப்பாடுகள் அவர்களைச் சென்று சேர வேண்டும் என்பதால் முடிந்தளவு முஸ்லிம்கள் இவ்வசதி வாய்ப்பினைப் பயன்படுத்த வேண்டும்.  [Telephone: 0112320145 , 0112320141 ]
அதே போன்று சட்ட ரீதியான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரம் தனிமைப்படுத்தப்படாமல் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் சட்டத்தரணிகள் தம்மால் இயன்ற வகையில் பல்வேறு ஊர்களில், பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து பொது பல சேனா போன்ற அமைப்புகளுக்கு சட்ட நெருக்கடிகளை, தினமும் நீதிமன்றம் ஏறி இறங்கும் தேவையை அதிகரிப்பதன் மூலமும் வழங்க முடியும் என சில சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மெளனித்திருக்கும் அரசியல் தலைமைகள்
தம் பதவிக்காகவும், செளகரியத்துக்காகவும் வாய் மூடி மெளனிகளாக இருக்கும் அமைச்சர் பெருமக்கள் எப்போதுதான் பேசுவார்கள் என முஸ்லிம் சமூகம் ஏங்கிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவ்வப்போது ஓடி அலைந்து எதையாவது செய்யத்துடிக்கும் அதே வேளை தற்போது தன் மகளின் நிகாஹ், வலிமா எல்லாம் முடிந்து உற்றம், சுற்றம் எல்லாம் கவனித்து முடித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதி? அமைச்சர் ரவுப் ஹகீம் கடந்த ஓரிரு நாட்களாக என்னென்னமோ பேசி தனது வீர தீரத்தைக் காட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
சமூக சேவையில் இருப்பவர்களுக்கு குடும்பமும் தேவையென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கப்போவதில்லையெனினும், ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது சூப்பர் சிங்கருக்குப் போனாலும் பரவாயில்லை, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் கொதித்துக் கொண்டிருந்த நிலையிலும் தன் வீட்டு வேலையில் “மட்டும்” கவனமாக இருந்த தலைவர் இப்போது எந்த முகத்தில் வெளிவருகிறார் என்றும் சமூகம் கேட்காமலில்லை. எனினும், இவ்வாறானவொரு தருணத்திலாவது எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து, வளர்ந்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு விவகாரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதன் அவசியம் அரசியல் ரீதியாக உணரப்படும் அதே வேளை, தம் சமூகக் கடமைகளை, தமக்கிடையில் இருக்கும் கொள்கைப் பிளவுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை மறந்து முஸ்லிம் சமூகமும் உணரும் காலகட்டம் இது என்பது ஆணித்தரமாக வலியுறுத்தப்படவேண்டிய விடயமாகும் !
- சோனகர் வலைத்தளம்

No comments:

Post a Comment