Wednesday, April 25

எகிப்து - இஸ்ரேலுடனான எரிவாயு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது!


இஸ்ரேலுடன் கையெழுத்திட்ட நீண்டகால எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை எகிப்து ரத்துச் செய்துவிட்டது.

ஒப்பந்த நிபந்தனையின் படி பணம் கட்டாததால் ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டதாக எகிப்தின் நேச்சுரல் கேஸ் ஹோல்டிங் கம்பெனி தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தை ரத்துச்செய்த முடிவை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்று கம்பெனியின் செய்தி தொடர்பாளர் முஹம்மது சுஐப் தெரிவித்துள்ளார்.

முபாரக் ஆட்சியின் போது இஸ்ரேலுடன் சர்ச்சைக்குரிய எரிவாயு விநியோக ஒப்பந்தம் கையெழுத்தானது. 1979-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுடன் எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை எகிப்து மேற்கொண்டது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 2005-ஆம் ஆண்டு முதல் கடும் எதிர்ப்புகள் நீடித்து வந்தன. குறைந்த விலைக்கு நாட்டின் இயற்கை வளத்தை இஸ்ரேலுக்கு விற்பதாக அதனை எதிர்ப்பவர்கள் குற்றம் சாட்டினர்.

ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் போது பல தடவை எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலுக்கு செல்லும் எரிவாயு குழாயை உடைத்தனர்.

அதேவேளையில் ஒப்பந்தத்தை ரத்துச் செய்த நடவடிக்கை எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான எதிர்விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்று இஸ்ரேல் நிதியமைச்சர் யுவல் ஸ்டீனிட்ஸ் கூறியுள்ளார். ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது எகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நிலவும் அமைதியான சூழலுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் ஸ்டீனிட்ஸ் தெரிவித்தார்.

இஸ்ரேலின் 40 சதவீத எரிசக்தி தேவைகளை நிறைவுச் செய்வது எகிப்தில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலமாகும். ஆகையால் இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது இஸ்ரேலுக்கு பின்னடைவாகும்

No comments:

Post a Comment