Thursday, December 29

தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி. சவால்; இலவசக் கல்விக்கு ஆப்பு வைக்க அனுமதிக்க முடியாது என்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ச!

Vimal_Veeravansa(அய்யாஷ்)
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மாணவர் அமைப்புகளுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சவால் விடுத்திருக்கும் நிலையில் அச்சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சட்டமூலம் இலவசக் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூகத்தில் உணரப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சு தயாரித்து வரும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து கற்றறிந்தவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சமூகத்தில் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சட்டமூலத்தில் மாத்திரமல்ல எந்தவொரு சட்ட மூலத்திலும் நாட்டின் இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு அனுமதி அளிக்க முடியாது. கடந்த காலங்களில் கலந்துரையாடல்கள் நடத்தாமல் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட சட்டமூலங்களால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆகையினால் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்காமல் அச்சட்டமூலத்தை அமைச்சரவைக்கோ பாராளுமன்றிலோ சமர்பிக்கக் கூடாது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள அதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்புகளும் ஜே.வி.பி.உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment