Monday, July 1

நாமே வெளியேறுவோம்; துரத்தினால் அவமானம் என்கிறார் அமைச்சர் பஷீர்!!


Basheerஅரசுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரான அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“உறுதியாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்தால் உறுதியாக அரசோடு இருக்க முடியாது. உறுதியாக அரசோடு இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் உறுதியா இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரசுடனும் அரசாங்கத்தோடும் ஒன்றாக இருந்தால் அரசின் பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிறைவேற்ற முடியாது. இது தான் நான் கண்ட அனுபவமாகும்.
 
அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கம் முரன்பாடுகள் ஆழமாகி விட்டன. இந்த நிலையில்தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இது பொருத்தமான காலமாகும். உறுதியான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
எதிரே மூன்று மாகாண சபை தேர்தல்கள் நடைபெறப்போகின்றன விஷேடமாக வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதென்றால் அரசிலிருந்து வெளியேறி விட்டு தனித்து போட்டியிடுவதே இன்றைய காலத்துக்கு பொருத்தமானதாகும்.
இவ்வாறில்லாமல் அரசுக்குள் இருந்து கொண்டு தனித்து போட்டியிட்டால் அரசுக்கு குழி பறிக்கும் ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அரசு பார்க்கும். அரசுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் உள்ள இடைவெளி இன்னும் அகலமும் ஆழமுமாகிவிடும்.
இதனால் கட்சிக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஆபத்துக்கள் ஏற்படாலம் என்ற அச்சமும் எனக்குள் இருக்கின்றது. இது என்னுடைய அரசியல் பார்வையாகும். எல்லோரும் அரசாங்கத்திருந்து வெளியேறுவோம். என்னுடைய கருத்தின் யதார்த்தத்தையும் உண்மைத்தன்மையையும் வலிமைப்படுத்துவதற்காகவே இதனை நான் கூறுகின்றேன் நானும் ராஜினாமாச் செய்து வெளியேறுவேன்.
நான் அரசின் கையாள் என்று விஸமத்தனமான பிரசாரம்!
இதற்கும் மேலதிகமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது முதல் நான் அரசின் ஒரு கையாள் என்று கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் விஸமத்தனமான பிரசாரம் செய்யப்படுகின்றது.
கடந்த வருடம் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்ற போது நான் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தேன். இந்த இராஜினாமாவையும் அரசின் வேண்டுகோளுக்கிணங்கவே செய்ததாக பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இதற்கு ஏதுவாக அமைச்சர் பசில் ராஜபக்ச ஊடகமொன்றுக்கு வெளியிட்டிருந்த கருத்தையும் ஆதரமாக கொண்டு பயன்படுத்தியிருந்தனர்.
இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி எனக்கு வழங்கப்பட்ட போது கட்சிக்குள் அரசின் ஆளாக செயற்படுவதாக பொய்யான பிரச்சாரம் செய்து எனது கடந்த கால அரசியல் வரலாற்றையும் அரசியல் வாழ்வையும் களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்து எனது அரசியலின் யதார்த்தத்தின் பூர்வீக தன்மையை தீவிரப்படுத்தி நான் மேலே சொன்ன முஸ்லிம் காங்கிரசில் இருந்தால் அரசாங்கத்தோடு இருக்க முடியாது. அரசாங்கத்தோடு இருந்தால் முஸ்லிம் காங்கிரசில் இருக்க முடியாது. அரசிலும் முஸ்லிம் காங்கிரசிலும் இருந்தால் முஸ்லிம் மக்களின் தேவைகள் எதையும் செய்யமுடியாது. இது தான் நான் கண்ட அனுபவமாகும்.
வட மாகாண சபை தேர்தலை மாத்திரம் கொண்டு நான் இதை பேசவில்லை தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ் நிலையை அடிப்படையாக கொண்டு பேசுகின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கமும் ஒன்றாக இருந்தாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரசே எடுக்க வேண்டுமே தவிர அரசு இத்தீர்மானத்தை எடுக்க முடியாது. ஏனென்றால் அரசு இது தொடர்பாக எடுக்கும் தீர்மானம் முஸ்லிம் காங்கிரசை துரத்துகின்ற அடிப்டையில் அமையும்.
இது ஸ்ரீலங்கா முஸ்விம் காங்கிரசினதும் அதன் போராளிகளினதும் தலைமைத்துவத்தினதும் தன்மானத்திற்கும் கௌரவத்திற்கும் கேடான விடயமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment