Monday, June 24

சாரதி அனுமதி பத்திரம் வேண்டுமென பிக்குகள் வாதம் - அரசாங்கம் எதிர்ப்பு

இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துசெய்யக் கோரி தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுவொன்றை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வஷ்கடுவ ஷாக்கியமுனி விகாரையின் தலைமை பிக்கு பரகொட விமலவன்ஸ தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 'பிக்குகள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று புத்த பகவான் எந்தத் தடையையும் விதிக்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்றைய நாடுகளில் புத்த பிக்குகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படுவதாகவும் இலங்கையில் பிக்குகளுக்கு அனுமதி பத்திரம் வழங்காமலிருக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் விமலவன்ஸ தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென்று அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவித்தார்.
'புத்த பகவானே ஆதரிப்பார்'
ஆனால் இந்த ஆட்சேபத்தை நிராகரித்த நீதிமன்றம் மனுவை தொடர்ந்து விசாரிப்பதற்கு அனுமதியளித்ததாக விமலவன்ஸ தேரர் பிபிசியிடம் தெரிவித்தார். 'வீதிக்கு சென்றால் பஸ் நிறுத்துவதில்லை. பஸ்ஸில் ஏறினால் சீட் கிடைப்பதில்லை. இப்படியான பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் பிக்குகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் வேண்டும் என்கிறோம்' என்றார் பரகொட விமலவன்ஸ தேரர்.
'கௌதம புத்தர் இன்று இருந்தால் அவரும் எமது வேண்டுகோளை ஆதரிப்பார்' என்றும் அவர் கூறினார். அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் 22-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment