Monday, May 6

அமைச்சர் றிசாத்தின் அணுகுமுறையை என்னால் அங்கீகரிக்க முடியாது - ரவூப் ஹக்கீம்

வடக்கில் தேர்தலை பின்போடாது ஜனநாயகத்திற்கு அமைய நடத்த வேண்டுமென வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அங்கு உரையாற்றும் பொழுது அவர் மேலும் தெரிவித்தவையாவன,
இந்த கட்சியை கட்சியை பலவீனபடுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் விளைவாக நாங்கள் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வந்திருக்கின்றோம். இந்த அரசாங்கத்துக்குள் ஓர் எதிர்கட்சியாகவே பார்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது 
தேர்தலுக்காக நான் இங்கு வரவில்லை. எங்களது பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு என்னிடம் காலத்தை ஒதுக்கித்தருமாறு கேட்டிருந்தார் இன்று கட்சி போராளிகளை சந்திக்க கிடைத்ததையிட்டு மகிழ்சியடைகின்றேன். எங்களுடைய அணுகுமுறை வித்தியாசமானது  இங்குள்ள அமைச்சரின் அணுகுமுறையை என்னால் அங்கீகரிக்க முடியாது .
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக  வாழுகின்ற பிரதேசங்களில் அவர்களின் அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடாத்தி புரிந்துணர்வுடன் விடயங்களுக்கு தீர்வு காண்பதுவே சிறந்த வழிமுறையாகும். இதுவே முஸ்லிம் காங்கிரஸின் அணுகுமுறையாகும் 
சண்டித்தனமாக பிரச்சினைகளை அணுகுவது ஆரோக்கியமானது அல்ல. இதுவே முஸ்லிம் காங்கிரஸின் நிரந்தரமான நிலைப்பாடாகும். சிங்களவர் பெரும்பான்மையினராக வாழும்பிரதேசங்களிலும் இதே நிலைப்பாடுதான் .
அவ்வாறே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் தழிழ் மக்களுக்கு சில விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டிய தேவையுள்ளது நாங்கள் எங்கு பெரும்பாண்மையாக வாழ்கின்றோமோ அங்கு சிறுபான்மையாக வாழும் சமுகத்தினரை அனுசரித்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கவில்லை என்ற விமர்சனம் இன்னும் இருந்து வருகின்றது ஆனால் சரியான ஒரு கட்டத்தில்தான் அவ்வாறான தீர்மானத்திற்கு நாங்கள் வரலாம். 
இன்று அரசாங்கத்தோடு இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் தண்ணீரில் எண்ணெய் மாதிரிதான் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. வாகனத்தில் ஆணி கழன்ற சில்லு ஆகத்தான் நாங்கள் பார்கப்படுகின்றோம் 
கடந்த மே தின கூட்டமொன்றில் அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்கமாக சொன்ன விடயமாக  வட மாகாண தேர்தல் வந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து விடும் என்றோ அல்லது வடக்கையும் கிழக்கையும்  இணைப்பதற்கு உடந்தையாகி விடுவோம் என்றோ அவருடைய கற்பனையில் படுகின்ற விடயங்களையெல்லாம் கூறிய நிலவரத்தை பார்கின்றோம் .
வடமாகாணத்தில் தேர்தலே நடத்த கூடாதென்று அமைச்சர் ரிசாதின் கட்சியும் சொல்லுகின்றது.  வீரவன்சவும் சொல்லுகின்றார் . அதில் மட்டும் அவர்கள் இருவருக்கும் உடன்பாடு. சம்பிக ரணவக்கவும் அவர்களோடு இந்த விடயத்தில் இணைந்து கொள்கின்றார. அந்த நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் இருக்க முடியாது.
எங்களது பார்வையில் வடமாகாணம் தமிழ் மக்களை பெரும்பாண்மையாக கொண்டது. எங்களுக்கு நடக்கும் அநியாயங்கள் முடிவுக்கு வரவேண்டியதை போல தமிழர்களுக்கு அநியாயம் நடந்தாலும் நேர்மையாக பேசும் கட்சியாகத்தான் நாங்கள் இருக்க முடியும். அவர்களுக்கு வாயப்பான மாகாண ஆட்சியொன்று அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை ஆனால் அவர்களோடு சேர்ந்து நாம் ஆட்சிஅமைக்க போகின்றோம் என்பது அர்தமல்ல. அரசாங்கத்துக்கு விரோதமாக நாங்கள் செயற்பட போகின்றோம் என்பதும் அல்ல .
ஜனநாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இன்று வடக்கில் முஸ்லிம்கள் இழந்து நிற்கும் அவர்களது வாக்குரிமையை பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளேன் அதில் மாற்று வழியொன்றை அறிமுகப்படுத்தி புதிய சட்டதிருத்தத்தை கொண்டுவர வழிகாணப்படும். 

No comments:

Post a Comment