Tuesday, May 21

‘வட-மாகாண தேர்தலை நடத்த அச்சப்பட வேண்டாம்’

130520153045_malwatta_mahanayake_304x171_bbc_nocreditஇலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு-மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ஒழித்துவிடுவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலைமையில், தேர்தலுக்கு முன்னதாக அந்த அதிகாரங்களை ஒழிப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்தத் தேவையில்லை என்று நாட்டில் செல்வாக்கு மிக்க மல்வத்து பௌத்த பீடம் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்று ஞாயிற்றுக் கிழமை மல்வத்து பீட மகாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
ஏற்கனவே சர்வ நிறைவேற்று அதிகாரங்களும் ஜனாதிபதியின் கையில் இருக்கின்றபோது, மாகாணசபைகளின் அதிகாரங்கள் பற்றி பயப்படத் தேவையில்லை என்றும் வடக்குத் தேர்தலுக்குப் பின்னர் அதுபற்றி பார்த்துக்கொள்ளலாம் என்றும் மல்வத்து பீட மகாநயாக்கர் கூறியதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன -மல்வத்து மகாநாயக்கர் இடையிலான சந்திப்பின்போது, அங்கிருந்த உள்ளூர் செய்தியாளர் ஜே.ஏ.எல். ஜயசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.
‘காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் இராணுவ அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஏற்கனவே இருக்கின்றபோது, மாகாணசபைகளுக்கு அந்த அதிகாரங்கள் இருப்பது பற்றி பயப்படத் தேவையில்லை’ என்று மல்வத்து மகாநாயக்க தேரர் கூறியுள்ளார்.
அவசரமாக வடக்கில் தேர்தல் நடத்தப்படவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் 13-வது அரசியலமைப்புத் திருத்தத்தை மாற்றுவது தொடர்பில் எதுவும் பேசாமல், தேர்தல் முடிந்தபின்னர் அதுபற்றி பார்க்கலாம் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை மாற்ற நடவடிக்கை எடுத்தால், ஜெனிவா மாநாடு போன்ற சர்வதேச அழுத்தங்களுக்கு இலங்கை அரசு முகம்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் மல்வத்து மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியதாக செய்தியாளர் ஜே.ஏ.எல். ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
அத்தோடு நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் ஒழிக்க வேண்டும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நிலைமை மோசமாகும் என்றும் தம்மை சந்திக்கவரும் அரசியல் தலைவர்களிடம் தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், ஆனால் இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் பற்றி வடக்குத் தேர்தலுக்குப் பின்னரே கவனம் செலுத்த வேண்டும் என்றும் மல்வத்து மகாநாயக்க தேரர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment