Tuesday, May 7

பர்மாவில் புத்த பிக்கு ஒருவரை கொன்றதாக ஆறு முஸ்லீம்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

 
பர்மாவில் புத்த பிக்கு ஒருவரை கொன்றதாக ஆறு முஸ்லீம்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
கடந்த மார்ச் மாதத்தில் பர்மாவின் மெயிக்டிலா நகரில் பல நாட்கள் நடந்த வன்செயல்களில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள்.
 
இந்த சம்பவங்கள் தொடர்பாக பௌத்தர்கள் ஒருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதியப்படவில்லை.
 
இந்தக் கலவரங்களின்போது கொல்லப்பட்டவர்களில் ஒரு புத்த பிக்குவும் அடங்குவார்.
 
இவர் மோட்டார்பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரை முஸ்லீம்கள் கூட்டமொன்று கீழே தள்ளி தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு முஸ்லீம்கள் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரணதண்டனை கிடைக்கும்.
 
ஆனால் மெயிக்டிலாவில் நடந்த வன்முறையில், இந்த ஒரு புத்த பிக்குவைத் தவிர பிற அனைத்து சம்பவங்களுமே முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராகவே குறிவைத்து நடத்தப்பட்டன. முஸ்லீம்கள் தரப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.
 
பிபிசிக்குக் கிடைத்த, போலிசாரால் எடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் , எரியும் வீடுகளிலிருந்து தப்பியோடிய இளம் முஸ்லீம்கள் ,அரிவாளால் வெட்டிக்கொல்லப்படுவதைக் காட்டின.
 
இந்த படக்காட்சிகளில் தெளிவாகவே அடையாளம் காணக்கூடிய நபர்களும் புத்த பிக்குகளும் முஸ்லீம் கடைகளையும் மசூதிகளையும் அழிப்பதைக் காணமுடிந்தது.
 
பர்மிய ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையும் மீறி, இது வரை எந்த பௌத்தர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதியப்படவில்லை.
 
வேறு மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜராயிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் முஸ்லீம் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்தவர்கள். இந்த கடையில் தான் கலவரம் தொடங்கியது. இந்தக் கடை சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது.
 
பர்மிய அதிபர் தெய்ன் செய்ன் நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையரின் உரிமைகளைப் பாதுகாக்கப் போவதாக திங்கட்கிழமை உறுதியளித்திருந்தார்.
 
ஆனால் மெயிக்டிலா நகரில் இதுவரை நீதி ஒருதலைப்பட்சமாகவே இருக்கிறது என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்

No comments:

Post a Comment