Friday, April 5

முஸ்லிம் அமைச்சர்களினால் வடக்கில் காணிகள் ஆக்கிரமிப்பு : பொதுபலசேனா

அரசாங்கத்திற்குள் உள்ள அடிப்படை வாதத்திற்கு துணை செல்லும் முஸ்லிம் அமைச்சர்கள் வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடி அவற்றை அடிப்படை வாத முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளனர்  என பொதுபல சேனாவின் அமைப்பாளர் டிலனந்த விதானகே தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற  செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக பூர்த்தியாகவில்லை என்று தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் குற்றம் சுமத்துவது உண்மையாகும். முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் காணிகளை ஆக்கிரமித்து அடிப்படைவாத முஸ்லிம் சக்திகளுக்கு அவ்விடங்களை வழங்கியுள்ளமையால் தமிழ் மக்களை மீள்குடியமர்த்த முடிவதில்லை.

இவ்வாறான அடிப்படைவாத சக்திகளின் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் பல் துறைகளில் இலங்கை கண்டுள்ள பின்னடைவுகளை சீர் செய்து முழுமையான பெளத்த கலாசாரத்திற்குள் ஏனைய சமூகத்தினையும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான விஷேட தேசிய தீர்மானங்களை இரு மாதத்திற்குள் வெளியிட உள்ளதாகவும் அவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பொதுபல சேனாவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பல அடிப்படை வாத அமைப்புக்கள் செயற்படுகின்றன. வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ள பொதுபலசேனா இலங்கையில் வாழும் பெளத்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மிகவும் ஆக்கபூர்வமாக செயற்பட்டு பல வெற்றிகளையும் கண்டுள்ளது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிகளில் உள்நாட்டில் செயற்படும் பல அடிப்படைவாத சக்திகளின் பெளத்த மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த அரசு முன்வர வேண்டும்.

முஸ்லிம் மக்களையோ பள்ளிவாசல்களையோ பொதுபலசேனா உடைக்கவோ தாக்கவோ இல்லை. ஆனால் பல அடிப்படைவாத சக்திகள் பொதுபலசேனா மீது வீண் பழிகளைச் சுமத்தி வருகின்றன. ஹலால் விடயத்திலும் அவ்வாறே குற்றஞ் சுமத்தப்படுகின்றது. பெளத்தர்கள் ஹலாலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறும் பொழுது அதனை திரிவுபடுத்தி இலங்கையில் ஹலாலை தடை செய்ய வேண்டும் என்ற பிரசாரத்தை குறிப்பிட்டு சில குழுக்கள் பரப்புகின்றது.

முஸ்லிம்கள் எமது சகோதரர்களே! அவர்களை முஸ்லிம் அடிப்படை வாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். அரசாங்கத்திற்குள் உள்ள அடிப்படை வாதத்திற்கு துணை செல்லும் முஸ்லிம் அமைச்சர்கள் வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடி அவற்றை அடிப்படை வாத முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளனர். இவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment