Friday, April 5

முஸ்லிம் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் கடிதங்கள்: சி.ஐ.டி. துரித விசாரணை


warningகொழும்பு தெமட்ட கொட வீதியிலுள்ள இஸ்லாமிய புத்தகசாலை மற்றும் தௌஹீத் பள்ளிவாசல் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு பொதுபலசேனாவின் பெயரில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் கடிதம் குறித்து இரகசியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் இயங்கும் ஆறுக்கு மேற்பட்ட முஸ்லிம் அமைப்புக்களை இம் மாதத்துக்குள் தமது படையணிகளை அனுப்பி தகர்த்துவிடுவதாக குறிப்பிட்ட கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த சனியன்றும் இரு நிறுவனங்களுக்கும் அடுத்த இரு தினங்களுக்குப் பின்பு மேலும் சில முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இக்கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இக்கடிதங்கள் தொடர்பாக தகவல் முஸ்லிம் கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டவுடனேயே பொதுபலசேனாவுடன் தொடர்பு கொண்டு இதன் உண்மைத் தன்மை பற்றி விளக்கம் கோரப்பட்டது. தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முஸ்லிம் கவுன்சிலுக்குத் தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவித்த முஸ்லிம் கவுன்சில் செயலாளர் அஸ்கர்கான் இது தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பு பிரிவினருக்கு கையளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் இந்த அச்சுறுத்தல் குறித்து ஜனாதிபதியினதும் பாதுகாப்புச் செயலாளரதும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். எந்த ஒரு நிறுவனத்தையும் மூடிவிட வேண்டிய தேவையில்லை என்றும் போதிய பாதுகாப்பினை அரசு வழங்கும் என்றும் அல்ஹாஜ் அஸ்வர் தெரிவித்தார்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய நிலையத்துக்கு விஜயம் செய்து விடயங்களைக் கேட்டறிந்தார். அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பொலிஸ் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment