Saturday, March 30

மொபிடெல் இணைப்புக்களை உடனடியாகத் துண்டியுங்கள் - முஸ்லிம்களிடம் அஸாத் சாலி


மொபிடெல் இணைப்புக்களை உடனடியாகத் துண்டியுங்கள்,
இனி அது எங்களுக்கு ஹராம்
முஸ்லிம் சமூகத்திடம் அஸாத் சாலி வேண்டுகோள்

மொபிடெல் நிறுவனம் பொது பல சேனாவுக்கு நேரடியாக நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.பொது பல சேனாவின் முஸ்லிம் விரோத எழுச்சி கீதத்தை தனது ரிங்டோன் பட்டியலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெருமளவு நிதியை அந்த அமைப்புக்குத் திரட்டிக் கொடுக்க மொபிடெல் நிறுவனம் முன்வந்துள்ளது.இந்த நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் வர்த்தக நிலையங்கள் கல்வி நிலையங்கள் என எல்லாவற்றையும் குறிவைத்து அப்பட்டமாக சட்டத்தை மீறி அடாவடித்தனம் புரிந்து வருகின்ற ஒரு நாசகாரக் கும்பலே பொது பல சேனா. இவர்கள் தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு சிங்கள ராவய, ராவணா சேனை, என்றெல்லாம் பல பெயர்களில் காடைத்தனம் புரிந்து வருகின்றனர். இதை விளங்கிக் கொள்ளாமல் விடுவதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல என்பதை நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.
பொது பல சேனா கொஞ்சம் கூட சட்டத்தை மதிக்காமல் இந்தளவுக்கு ஆட்டம்போட முக்கிய காரணம் அரசாங்கம் அதன் பின்னணியில் இருப்பதாகும்.குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொது பல சேனாவுக்கு பூரண ஆதரவாக இருக்கின்றார் என்பதற்கு அவரின் அண்மைக் கால நடவடிக்கைகள் வெளிப்படையான சான்றாகும். பெஷன் பக் நிறுவனம் தாக்கப்பட்ட கடைசியாக இடம்பெற்ற காடைத்தனத்தின் போது கூட சம்பவம் நடந்த இடத்துக்கு சம்பவம் நடந்து முடிந்த கொஞ்ச நேரத்தில் அவர் விஜயம் செய்துள்ளார். இதனை நேரில் கண்ட பல சாட்சிகள் உள்ளனர். குறிப்பாக எந்த விகாரையில் இருந்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக பெரும்பாலும் சந்தேகிக்கப் படுகின்றதோ, எந்த விகாரையில் இருந்து வந்தவர்கள் ஆயுதங்களுடனும் பொல்லுகளுடனும் வந்து பெஷன் பக் நிறுவனத்தைத் தாக்கினார்கள் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றார்களோ அதே விகாரைக்கு தான் பாதுகாப்பு செயலாளர் நள்ளிரவில் விஜயம் செய்துள்ளார்.
சாதாரணமாக ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அங்கு வரும் அரச உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரம் கோருவதும் விசனம் தெரிவிப்பதும்,ஆறுதல் கூறுவதும் தான் வழக்கம்.ஆனால் இங்கு பாதுகாப்பு செயலாளர் தாக்குதல் நடத்தியவர்களையும் அதற்கு திட்டமிட்டவர்களையும் சந்தித்து நேரடியாக பாராட்டுத் தெரிவிக்க வந்தாரா? என்று முஸ்லிம் சமூகம் சந்தேகம் கொண்டுள்ளது. ஜனாதிபதி கூட செல்லுகின்ற இடமெல்லாம் இந்த நாடு எல்லா இனங்களுக்கும் சொந்தமானது, எல்லோருக்கும் வாழும் உரிமை உள்ளது, இன நல்லுறவைப் பேணுவேன் என்று வாய் கிழிய கூறுகின்றாரே தவிர இவற்றுக்கு பாதகமாக நடக்கின்ற எவரையும் சட்டப்படி தண்டிக்க இது வரை எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் தான் அரச கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமான மொபிடெல் இன்றைய பிரச்சினைகள் அனைத்துக்கும் சூத்திரதாரியான பொது பல சேனாவுக்கு நிதி திரட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. அரசாங்க நிறுவனம் ஒன்று இந்த முடிவை எடுத்துள்ளமையானது பொது பல சேனாவுக்கு அரசின் பூரண ஆதரவு உள்ளது என்பதை மேலும் உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. மொபிடெல் நிறுவனம் தனது முடிவை கை விட வேண்டும் என இதுவரை விடுக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் பலனலிக்கவில்லை.
எனவே முஸ்லிம்கள் உடனடியாக தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. மொபிடெல் இணைப்புக்களை பாவிக்கும் சகல முஸ்லிம்களும் (தொலைபேசி, இணையத்தள சேவை,டொங்கிள்கள் மற்றும் சேவைகள்) அவற்றை உடனடியாகத் துண்டிக்க வேண்டும். பொது பல சேனா போன்ற ஒரு அமைப்புக்கு உதவும் ஒரு நிறுவனத்துடன் நாம் எந்த வகையில் தொடர்புகளைக் கொண்டிருந்தாலும் அது எமக்கு ஹராமாகும் அதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை. முடியுமானவரை அருகில் உள்ள மொபிடெல் நிலையங்களுக்கு விஜயம் செய்து அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் இணைப்புக்களைத் துண்டிப்பதற்கான காரணத்தைக் கூறி அதை செய்யுங்கள் அப்போதுதான் வர்த்தக ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் தாக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள முடியும். உபகார இணைப்பக்களை வைத்திருக்கும் மௌலவிமார்கள் மற்றும் அரச ஊழியர்களும் கூட இலாபத்தை பார்க்காமல் இந்த முடிவை எடுத்து மொபிடெல்லுக்கு பாடம் புகட்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உடனடியாக இதைச் செய்ய ஆரம்பித்தால் ஓரிரு தினங்களில் அவர்களுக்கு தாக்கம் விளங்கவரும். முஸ்லிம்கள் அனைவரும் ஒத்துழைத்தால் இலட்சக்கணக்கான இணைப்புக்களை ஓரிரு தினங்களுக்குள் துண்டிக்கலாம். சமூகத்தின் நலன் மற்றும் கௌரவம் கருதி இதை செய்யுமாறும், உங்கள் இணைப்புக்களைத் துண்டித்தவுடன் அதன் இலக்கம் உட்பட விவரங்களை அஸாத் சாலி மன்றத்துக்கு அறியத் தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment