Thursday, March 28

சவூதியில் இந்திய, இலங்கையர் வேலை இழக்கும் அபாயம்

சவூதி அரேபியா அரசின் புதிய கொள்கையால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் இலங்கையர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளமானவற்றில் இந்தியர்கள் மற்றும் இலங்கையர் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.

எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களைப் பார்த்து சவூதியில் உள்ள வேலையில்லா இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சவூதி அரேபிய குடிமகன்கள் ஏராளமானோர் வேலையின்றி இருக்கின்றனர். சவூதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறையின் ஆய்வில் நாட்டில் கடந்த ஆண்டில் 588,000 பேர் வேலையின்றி இருந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் 15 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களில் 39 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவது தான் தற்போது அரசின் முதல் வேலையாக இருக்கிறது.

இதையடுத்து அரசு புதிய தொழிலாளர் கொள்கையை வகுக்கவிருக்கிறது. அதன்படி உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் வெளிநாட்டவர்களை வேலைக்கு வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

உள்நாட்டவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால் வெளிநாட்டவர்களுக்கு குறைந்த அளவே வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் சவூதியில் பணிபுரியும் இந்தியர்கள்,இலங்கையர் மற்றும் தெற்காசியர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment