Tuesday, January 31

Crude Oilசியோல்: ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண, தனது 'கைப்புள்ள'யான தென் கொரியாவை தூதனுப்புகிறது அமெரிக்கா. உலகிலேயே அதிக எண்ணெய் குடிக்கும் நாடு அமெரிக்காதான். ஏகப்பட்ட கச்சா எண்ணெயை இருப்பில் வைத்திருக்கும் நாடும் அதுவே.

ஆனாலும், எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டு, உலகின் எண்ணெய் இருப்புகளை முடிந்தவரை தன் கட்டுக்குள் கொண்டுவருவது அதன் தலையாய பணி.
எண்ணெய் இருப்பு எக்கச்சக்கமாக வைத்துக் கொண்டு, யாரெல்லாம் தமக்கு தலைவலியாகத் திகழ்கிறார்களோ, அவர்களை 'மக்கள் புரட்சி' என்ற பெயரில் காலி பண்ணுவது இன்னொரு முக்கிய வேலை அமெரிக்காவுக்கு. வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எல்லோரும் அமெரிக்காவின் வலையில் விழுந்துவிட்டன
இப்போது பெரும் தலைவலியாகத் திகழ்வது ஈரான். ஈராக்கில் புகுந்த மாதிரி அத்தனை சுலபமாக இங்கே நுழைந்துவிடவும் முடியாது. காரணம் ஒரளவு மக்களாட்சியெல்லாம் வந்துவிட்டது அங்கு.
எனவே ஈரானின் அணுகுண்டு முயற்சியைக் காரணம் காட்டி தனிமைப்படுத்த முயற்சிக்கிறது அமெரிக்கா (ஈராக்கை அழிக்க சொன்ன அதே காரணம்!).
பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஈரானுக்கு எதிராக மேற்கொண்டுள்ளது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாத ஈரான், 'நீங்கள் என்ன தடை விதிப்பது... இதோ குறிப்பிட்ட சில அமெரிக்க ஜால்ரா நாடுகளுக்கு நாங்கள் கச்சா எண்ணெய் தரமாட்டோம்," என அறிவித்துவிட்டது.
இதனால் பல்வேறு நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம் என அஞ்ச ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் தோழமை நாடான தென்கொரியா பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.
அந்நாட்டின் அதிபர் லீ மியாங் பாக் மத்திய கிழக்கு நாடுகளில் அவசர சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். பிப்ரவரி 7-ந் தேதி முதல் அவர் சவுதி அரேபியா, கத்தார், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஈரானிலிருந்து முற்றிலுமாக கச்சா எண்ணெய் நின்றுவிட்டால், பற்றாக்குறையைச் சமாளிக்க மற்ற நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே இந்தப் பயணம்.
அப்படியும் சமாளிக்க முடியாவிட்டால், இருக்கவே இருக்கிறது வழக்கமான அமெரிக்க உத்தி... ஈரானைச் சோதிக்க ஐநா குழு அனுப்புவது... தொடர்ந்து அமெரிக்கப் படையையும்!

No comments:

Post a Comment