Friday, July 22

சிறிலங்காவுக்கான உதவிகளை தடை செய்ய அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக்குழு முடிவு


[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011,
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு நம்பகம் வாய்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை சிறிலங்காவுக்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைகள், கண்ணிவெடிகளை அகற்றுதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றுக்கான உதவிகள் தவிர்ந்த சிறிலங்காவுக்கான ஏனைய அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று காங்கிரசின் வெளிவிவகாரக் குழுவின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் சபை உறுப்பினர் ஹோவார்ட் பெர்மன் முன்வைத்த இந்த யோசனைக்கு வெளிவிவகாரக் குழு குரல் வாக்கு மூலம் அங்கீகாரம் அளித்தது.

சிறிலங்காவின் நிலைமைகளை அவதானித்து அனுமதி அளிக்கப்பட்ட பின்னரே உதவிகள் வழங்கப்பட வேண்டும் வெளிவிவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணையை வலியுறுத்தியுள்ள இந்தக்குழு, ஊடக சுதந்திரம், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுதல் ஆகியன குறித்தும் சிறிலங்கா கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

எனினும் வெளிவிவகாரக் குழுவில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது.

இது குறித்து செனட் சபைக்கும் பிரதிநிதிகள் சபைக்கும் இடையில் நடைபெறும் நீண்ட கலந்துரையாடல்களின் பின்னரே இறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்க 2010வது நிதியாண்டில் யுஎஸ் எய்ட் அமைப்பு 13 மில்லியன் டொலரை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment