Thursday, May 19

கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி கொடியேற்றமும்! ஈமானை இழக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளும்!


அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
இஸ்லாமிய மார்க்கம் பாவச் செயல்களில் மிகப் பெரிய பாவமாகக் கருதுவது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும். இப்பாவம் இஸ்லாத்தின் பார்வையில் மிகக் கொடியதாகும்.
ஒருவர் ஒரு மனிதனை வணங்குவதோ அல்லது அந்த மனிதனிடம் கடவுள் தன்மை உள்ளது என்று நம்புவதோ, அவர் மரணித்த பின் அவரது மண்ணறையை புனிதமாகக் கருதுவதோ, அதை கட்டி வைத்துக் கொண்டு சுற்றி வருவதோ, அக்கல்லறையை தொட்டு முகர்வதோ, எண்ணெய் தடவுவதோ, அவரிடத்தில் தமது தேவையை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்திப்பதோ, அவருக்காக அறுத்துப் பலியிடுவதோ, அவருக்காக நேர்ச்சை வைப்பதோ, அவரின் பேரில் சத்தியம் செய்வதோ அக்கல்லறையை நோக்கி நேர்சை செய்து பிரயானம் செய்வதோ இணை வைத்தல் எனும் கொடிய பாவத்தைச் சேர்ந்தவைகளாகும் என இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
இணை வைத்தல் பற்றி அல்குர்ஆன்
மன்னிக்கப்படாத குற்றம்இறைவன் அல்குர்ஆனில் இணை வைத்தல் எனும் பாவத்தைத் தவிர உள்ள பாவங்களை தாம் நாடியவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பபதாகக் குறிப்பிடுகின்றான். ‘நிச்சயமாக அழ்ழாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற)எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்துவிட்டார்.’(அல்குர்ஆன் 4:48)‘நிச்சயமாக அழ்ழாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற)எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக வெகு தூரமான வழி கேடாக வழிகெட்டுவிட்டார்.’ (அல்குர்ஆன் 4:116
)
ஏற்கனவே செய்த நன்மைகளை அழித்துவிடக் கூடிய கொடிய பாவம்
‘இன்னும் அவர்கள் (அழ்ழாஹ்வுக்கு இணை வைத்திருந்தால்) அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)யாவும் அவர்களை விட்டு அழிந்து விடும்.’ (அல்குர்ஆன் 6:88) மற்றுமோர் இடத்தில் ‘(நபியே)நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்து விடும்.’ (அல்குர்ஆன் 39:65)
சுவர்க்கம் செல்வதை ஹராமாக்கும் பாவம்
‘நிச்சயமாக எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அழ்ழாஹ் சுவனபதியை தடுத்து விடுகின்றான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான்.’ (அல்குர்ஆன் 5:72)
வானத்திலிந்து விழுந்தவனைப் போன்றவன்
‘அழ்ழாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான்.’ (அல்குர்ஆன் 22:31)
மேற்கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் ஒரு இறை விசுவாசி இப்பாவத்தின் சாயல் படுவதையே விரும்ப மாட்டான் விரும்பவும் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு இறை விசுவாசியைப் பொறுத்தவரை இவ்வாறான அம்சங்களைச் செய்வதோ அல்லது இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதோ அவனுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாயலைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் பார்வையில் பள்ளிவாயல் என்ற தகுதியை இழந்த ஓர் இடமாகவே கணிக்கப்படும். காரணம் பள்ளிவாயல்களில் இறைவன் மாத்திரம்தான் வணங்கப்பட வேண்டும், அழைக்கப்பட வேண்டும், பள்ளிவாயலினுள் சாமாதிகள் இருக்கக் கூடாது.
கல்முனைக்குடி கடற்கரை மசூதியில் சமாதி வழிபாடு நடைபெறுகிறது, அழ்ழாஹ் அல்லாதவர்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் தமது தேவையை மக்கள் கேட்கின்றனர் ஷிர்குகள் நிறைந்த பாடல்கள் பாடப்படுகின்றன, ராதிபுக்கள் நடைபெறுகின்றன, இசை கலந்த பாடல்கள் ஒலிக்கப்படுகின்றது, ஆண் பெண் கலப்புக்கள், அநாச்சாரங்கள், கலாசார சீர்கேடுகள் ஆகியன இடம்பெறுகிறன. மொத்தத்தில் அநாச்சாரங்களின் முழு வடிவமாக இவ்விடம் இருப்பதைக் காணலாம்.
அழ்ழாஹ்வின் மார்க்கம் பரிகசிக்கப்படுகின்ற, கேவலப்படுத்தப்படுகின்ற, குழிதோண்டிப் புதைக்கப்படுகின்ற இவ்வாறான இடங்களுக்கு முஸ்லிம்கள் செல்வது மாற்று மதத்தவர்கள் தமது வணக்கஸ்தலங்களில் நடாத்தும் ஆராதனைகளை ஆதரித்து கோவில் விழாக்களுக்கு செல்வதற்கு சமமானது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இவ்வாறான இடங்களுக்கு செல்வது, மார்க்க ரீதியில் குற்றமாகும். இவ்வாறான இடங்களை நோக்கி பிரயாணம் செய்யும் வேளையில் மரணம் வந்துவிட்டால் அது கெட்ட முடிவுக்குரிய அடையாளமாகும்.
இறைவன் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ‘அழ்ழாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான. நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அழ்ழாஹ் ஒன்று சேர்ப்பான்.’ (அல்குர்ஆன் 4:140) இவ்வசனத்தில் அழ்ழாஹ்வினுடைய மார்க்கம் நிராகரிக்கப்பட்டு பரிகாசிக்கப்படுவதை ஒரு சபையில் இருந்து மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பதையே அழ்ழாஹ் எச்சரிக்கையாக குறிப்பிடுவதைக் காணலாம்.
ஆனால், இன்று இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இதனுடைய விபரீதம் புரியாமல் இவ்வாறான இடங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அழ்ழாஹ்வின் சாபத்தை பெற்றுத் தரக்கூடிய இந்நிகழ்வுகளில் ஓர் உண்மை விசுவாசி கலந்துகொள்ளக் கூடாது.
ஷைத்தானுக்கு வழிப்பட்டவர்கள் இவ்வாறான போதனைகளை புறக்கணித்து விட்டு கலந்துகொள்ளச் சென்றால் இவர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இருந்து விடவும் கூடாது. மாற்று மதத்தவர்கள் தமது ஆராதனைகளின் வடிவங்களாக தேர்த் திருவிழா என்றும், சந்தனக் கூடு என்றும், கொடி மரம் கொடியேற்றம் என்றும், அன்னதானம் என்றும் தமது தெய்வங்களை ஆராதனை செய்வதற்கு நிகராக நாமும் சளைத்தவர்கள் அல்லர் என்ற அமைப்பில் சமாதி வழிபாட்டில் இன்றய முஸ்லிம்களில் ஒரு சாரார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது செயற்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்பதை மார்க்கத்தின் பெயரால் கூறிக் கொள்கின்றோம்.
பொழுது போக்கிற்காக சென்று வரலாமா?
மார்க்க விரோத செயற்பாடுகள் நடைபெறாத பள்ளிவாயல்களுக்கே விஷேடமாக பயணம் செய்து தரிசிப்பதை இஸ்லாம் விலக்கியிருக்கின்றது. ஆனால் பல பாவங்களின் மையமாகவுள்ள மேற்படி இடத்திற்கு தின்பண்டங்கள், பொருட்கள் வாங்கச் சென்றாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அதற்கு வழங்கும் மௌன அங்கீகாரமாகவே அது அமையும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜதுந் நபவ், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாயல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி-1189)
இறைவன் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ‘(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்கமாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு என (முஹம்மதே!) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 109:1-6)
இவ்வசனத்தில் மிகத் தெளிவாக இறைவன் இறை மறுப்பாளர்கள் வணங்குவதை முஸ்லிம்களாகிய நாம் வணங்கக் கூடாது எனக் கூறியிருப்பதைக் காணலாம். மேலும் அழ்ழாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். ‘யார் எந்தச் சமுதாயத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே.’ (அறிவிப்பவர்: இப்னு உமர், நூல்: அபூதாவூத்). இந்த செய்தியில் பிற மதத்தவருடைய கலாசாரத்திற்கு ஒப்பாகுவதை நபியவர்கள் தெளிவாக தடுத்திருப்பதைக் காணலாம்.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அநாச்சாரத்தின் முழு வடிவமாகத் திகழும் கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்றமும் அதையொட்டிய இன்னும் பல நிகழ்வுகளும் இஸ்லாத்தின் பார்வையில் கொடிய பாவச் செயல்கள் என தெரிந்ததன் பிறகும் இதில் கலந்த கொள்ள முயற்சிப்பது ஒரு உண்மை விசுவாசிக்கு உகந்ததல்ல.
ஒரு கணவன் தனது அன்பு மனைவி விரும்புகிறாளே என்பதற்காக அவளது குறித்த இவ்வாசைக்கு கட்டுப்படுவதோ ஒரு மனைவி தனது அன்புக் கணவன் விரும்புகிறாரே என்பதற்காக இவ்வாசைக்கு கட்டுப்படுவதோ அல்லது தனது அன்புக் குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதற்காக அல்லது தனது பாசத்துக்குறிய தாய் தந்தையர்கள் விரும்புகின்றனர் என்பதற்காக அல்லது தனது உறவினர்கள், அயல் வீட்டுக்காரர்கள் விரும்புகின்றனர் என்பதற்காக அழ்ழாஹ் கடுமையாக வெறுக்கின்ற கோபிக்கின்ற இவ்வாறான நிகழ்வுகளுக்கு செல்வதற்கு உதவியாக இருக்கக் கூடாது.
அழ்ழாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். ‘மற்றவர்களிடம் அழ்ழாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அலி (ரழி), நூல்: புஹாரி-7257). மற்றவர்கள தன்னை தவறாக நினைத்துவிடுவார்கள் என்றோ அல்லது அவர்களது அன்பு தனக்கு இல்லாமல் போய் விடுமென்றோ அற்ப சொற்ப உலக ஆதாயத்திற்காக அழ்ழாஹ்வின் மார்க்கத்தில் கைவைக்கக் கூடாது.
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இருளான இரவின் துண்டுகளைப் போன்று அடுக்கடுக்கான குழப்பங்கள் வருவதற்கு முன் நன்மைகளை அவசரப் படுத்துங்கள். (அந்நேரத்தில்) காலையில் முஃமினாக இருந்தவன் மாலையில் நிராகரிப்பவனாக மாறிவிடுவான். மாலை நேரத்தில் முஃமினாக இருந்தவன் காலையில் நிராகரிப்பவனாக மாறிவிடுவான். தனது மார்க்கத்தை அற்ப உலக நோக்கத்திற்காக விற்றுவிடுவான்.’ (நூல்: முஸ்லிம்)
‘நீங்கள் நலவுக்கும், இறையச்சத்திற்கும் பரஸ்பரம் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் எல்லை கடந்து செல்வதற்கும் துணையாக இருக்காதீர்கள்.’ (அல்குர்ஆன் 5:2)

1 comment: