[ வியாழக்கிழமை, 10 மே 2012, 08:39.30 AM GMT ] [ உதயன் ]
மன்னார் மாவட்டம் முருங்கன் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றக்கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் தர்மகர்த்தா சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய தர்மகர்த்தா சபையின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இரட்டைக் குளம் கிராம அலுவலர் பிரிவில் முருங்கன் நகர் புகையிரத நிலையத்துக்கு முன்பாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 1942 ஆம் ஆண்டு 99 வருட குத்தகை அடிப்படையில் தனியார் காணி ஒன்று இந்த ஆலயத்துக்கு வழங்கப்பட்டது.
கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். நீண்ட காலத்தின் பின்னர் அந்தப் பகுதியில் மீளக்குடியமர்வதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடக்கம் பௌத்த பிக்கு ஒருவர் ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் அடாத்தாக தங்கியிருந்து அந்தப் பகுதியைப் பௌத்த புனித பிரதேசமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் ஆலயத்துக்குரிய 40 பேர்ச் காணியில் இரண்டு இடங்களில் புத்தர் சிலைகளை பிக்கு நிறுவியுள்ளார். அவற்றில் ஒன்று ஆலயத்துக்கு மிக அருகில் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் "புராதனமான விகாரை' என்ற பெயர்ப் பலகை ஒன்றும் அங்கு நடப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் அம்மனுக்குப் பூசை வழிபாடுகள் தடைப்பட்ட நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் ஆலய வளாகத்தில் தங்கி இருந்து புத்தர் சிலைகளை அமைத்து அங்கு பௌத்த விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வருட ஆரம்பத்தில் புத்தர் சிலை விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தர்மகர்த்தா சபையால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கு ஆரம்பத்தில் பொலிஸார் மறுப்புத் தெரிவித்து வந்த போதிலும் பல்வேறு உயர் அதிகாரிகளுடன் தர்மகர்த்தா சபையினர் தொடர்பு கொண்டு அழுத்தங்களைக் கொடுத்த நிலையிலேயே பின்னர் முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வருகிறது.
அதன் பின்னரும் அங்கு புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள புத்தர் சிலையை அகற்றக் கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தர்மகர்த்தா சபையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.