இலங்கைக்கான இஸ்ரேல் தூதரகம் 20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கொழும்பில் இயங்குவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி தெரிவித்துள்ள தகவலில்.
ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது அவர் இலங்கையில் இஸ்ரேலியத் தூதரகம் இயங்குவதற்கு அனுமதி மறுத்தார். இதனால், இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் இந்தியாவில் இருந்துகொண்டே செயற்பட்டார். சுமார் 20 வருடங்கள் கழித்து இஸ்ரேலியத் தூதுவர் மீண்டும் இலங்கையில் செயற்பட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். இது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நாமும் அதிர்ச்சியடைகின்றோம்.
இஸ்ரேலிய அரசு பலஸ்தீனத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தெட்டத் தெளிவானவை. இலங்கை பலஸ்தீன நட்புறவில் முக்கிய பங்கு வகிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இஸ்ரேலியத் தூதுவர் இலங்கையில் செயற்பட அனுமதி வழங்கியிருக்கக்கூடாது.
இஸ்ரேலியத் தூதுவர் நியமிப்பால் இலங்கை முஸ்லிம்கள் அச்சங்கொண்டுள்ளனர். இந்த விடயத்தில் நாம் அக்கறை செலுத்துகின்றோம். இது தொடர்பில் எமது கட்சி கூடி ஆராயும். ஜனாதிபதியைச் சந்தித்து இது தொடர்பில் பேசுவோம் என்றும் தெரிவித்துள்ளார் .