நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.
அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்?
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He, இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்கு தெரியும்) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.