Thursday, June 6

ஜனாதிபதி மஹிந்த இருக்கும் வரை முஸ்லிம்கள் அஞ்சத் தேவையில்லை : ஹிஸ்புல்லா


இலங்கை நாட்டில் பெரும்பான்மை சமூகத்திற்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இந்த நாட்டிலே வாழ்கின்ற எல்லா சமூகத்திற்கும் இருக்கின்றன என்பதை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தால் வசதி குறைந்த 4000 குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
மூன்று தசாப்த கால கொடூர யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டிலே அமைதியான சூழ்நிலை ஏற்பாட்டு சகல இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் அரசாங்கத்திற்கும் ஏனைய சமூகங்களுக்கும் மத்தியில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியிலும் ஒரு இனத்திற்கும் மற்றொரு இனத்திற்கும் மத்தியிலும் பொய்யான வதந்திகளைப் பரப்பி பிரச்சினைகளை ஏற்படுத்த சில தீய சக்திகள் முனைகின்றனர்.
இதில் முஸ்லிம்களாகிய நாங்கள் ஏமாந்து விடக்கூடாது. இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் பாரிய கவனமெடுத்து வருகின்றது.
இந்த நாட்டில் சகல இனத்தவர்களும் ஒரு தாய் மக்கள் என்ற ஜனாதிபதியின் வாசகத்திற்கேற்ப வதந்திகளை நம்பாமல் நாமெல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
இந்நாட்டில் பெரும்பான்மை சமூகத்திற்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இந்த நாட்டிலே வாழ்கின்ற எல்லா சமூகத்திற்கும் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனவே முஸ்லிம்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை என்றார்.

No comments:

Post a Comment