Tuesday, June 18

புருலப்பிட்டிய சிங்கள வித்தியாலய முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு






மினுவாங்கொடை- புருலப்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகளின் சீருடை தொடர்பாக அண்மையில் எழுந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் தொடர்பு கொண்டு இது விடயமாக தெளிவுபடுத்தியதன் பயனாகவே இந்த குழப்ப நிலைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.எம். சுஹைதர் தெரிவித்தார்.

‘‘இவ்வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் இனிமேல் காற்சட்டை மற்றும் முந்தானை அணிந்து வரக்கூடாது; முஸ்லிம் மாணவர்கள் இதன் பிறகு ஜும்ஆத் தொழுகைக்கு செல்ல முடியாது’’ என்று அதிபர், உப அதிபர், உள்ளிட்ட ஒரு சில ஆசிரியர் குழுவினால் மாணவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தனர். இதனால் முஸ்லிம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.டி.என். டைட்டஸ் உடன் கடந்த 10 ஆம் திகதி இவ்வித்தியாலயத்திற்கு நேரடியாகச் சென்று அதிபரை சந்தித்து இது விடயம் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் ‘‘அமுல்படுத்தப்படவிருந்த இந்த விவகாரம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக அதிபர் தம்மிடம் உறுதியளித்ததாகவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். இவ்வித்தியாலயத்திற்கு செல்லும் முஸ்லிம் மாணவ, மாணவிகள், இனிமேல் எவ்வித அச்சமும் கொள்ளாமல் முன்னர் போலவே இப்பாடசாலைக்குச் செல்ல முடியும்’’ என்றும் அவர் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment