Monday, June 24

எதிர் கட்சியினூடாக மு.கா. தெரிவுக்குழுவில் இடம்பெற வாய்ப்பு?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபாநாயகருடன் தொடர்புகொண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து ஆராய்ந்தால் எதிர்க்கட்சிகளின் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பில் பரிசீலிக்க முடியும். இது சாத்தியமான விடயமாகும் என்று ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிடவில்லை என்றும் 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரமே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஒதுக்கீடுகளை சபாநாயகர் செய்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆளும் கட்சியின் எம்.பி. க்கள் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் உள்ளடக்கப்டாமை குறித்து அக்கட்சி கடும் விசனங்களை தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடம்பெறாத பாராளுமன்றத் தெரிவுக்குழுவை குப்பையில் போடவேண்டும் என்று அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. 
 
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிடவில்லை என்றும் சபாநாயகருடன் தொடர்புகொண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து ஆராய்ந்தால் எதிர்க்கட்சிகளின் ஊடாக அதில் இடம்பெற முடியும் என்றும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளார். 
 
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்த்தரப்பிலேயே இருந்தது. அந்த வகையில் சபாநாயகர் 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரமே இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் கூறியுள்ளார். 
 
அந்தவகையில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கவுள்ள ஒதுக்கீடுகளின் ஊடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறச் செய்ய முடியும் என்றும் இதற்கு சபாநாயகரிடம் தொடர்புகொண்டால் அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
குறிப்பாக பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க எம்.பி. க்கள் உள்ளனர் என்றும் எனவே எதிர்க்கட்சிகளின் ஊடான ஒதுக்கீட்டின் மூலம் அக்கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற முடியும் என்றும் இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உரிய முறையில் சபாநாயகரை அணுகவேண்டும் என்றும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment