முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சக்திகளை ஒடுக்கும் அரசின் செயற்பாடே
தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைத்துக்
கொள்ளப்படாமைக்கு காரணம் என தெரிவிக்கும் மு.கா. வின் செயலாளர் நாயகம் ஹஸன்
அலி, 18 ஆவது சீர்திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததன் விளைவுகளையே தாம்
தற்போது அனுபவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அரசுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிய மு.கா. வை அரசின்
பங்காளி கட்சியாக மதிக்காது தொடர்ந்தும் அரசு மிதித்து வருவதால்
அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும்
29 ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீடத்தில் கலந்தாலோசித்து
முடிவெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராயும் பொருட்டு விசேட பாராளுமன்ற
தெரிவுக்குழு உறுப்பினர்களின் ஆளும் கட்சி பெயர்கள் கடந்த வெள்ளியன்று
சபாநாகரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த தெரிவுக்குழுவில் அரசின்
பங்காளி க்கட்சி என்ற வகையிலேனும் மு.கா. உறுப்பினர் ஒருவர் தெரிவு
செய்யப்படாமை குறித்து கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவானது 13 ஆம் திருத்தம் தொடர்பில் ஆராய
நியமிக்கப்பட்டதல்ல. அது இனப்பிரச்சினை தீர்வு குறித்தானது. எனினும்
இனப்பிரச்சினை தீர்வு குறித்தாக இருப்பினும் 13 ஆம் திருத்தம் தொடர்பாக
தெரிவுக்குழு அமைப்பினும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில்
மு.கா. உறுப்பினர்கள் அதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சக்திகளை ஓரங்கட்டுவதற்கு
அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் விளைவே மு.கா. உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படவில்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் பரிணாமத்தை அரசு மூடி
மறைத்து ஒழிக்க முயற்சிக்கின்ற நிலையில் தொடர்ந்தும் அரசுடன் ஒட்டிக்
கொண்டிருப்பது பயனற்றது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க உதவியதுடன் பல்வேறு இக்கட்டான
சந்தர்ப்பங்களில் மு.கா. அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில்
அரசுக்கான ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதா அல்லது இத்துடன் நிறுத்திக்
கொள்வதா என்பதை 29 ஆம் திகதி உயர் பீடத்தில் தீர்மானிப்போம்.
‘‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’’ என ஒரு பழமொழி உள்ளது. இதனையே
மு.கா. இன்று அனுபவிக்கிறது. 18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததன்
விளைவுகளையே இன்று நாம் அனுபவிக்கிறோம். எனினும் அரசு தொடர்ந்தும் எம்மை
புறக்கணிக்கும் நிலையில் நிலைமையை அப்படியே விட்டு விடமாட்டோம். 29 ஆம்
திகதி உயர் பீடத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து முடிவெடுப்போம் என
தெரிவித்தார். |
No comments:
Post a Comment